புதுடெல்லி: அடுத்த மக்களவை தேர்தலில் (2024) ஆதரவை அதிகரிக்க, பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று முதல் 75,000 தலித் பகுதிகளில் பாஜக முகாமிடுகிறது.
இன்று பிரதமர் மோடியின் பிறந்த நாள். இந்நாளில் நாடு முழுவதும் தலித்துகள் வாழும் 75,000 பகுதிகளில் பாஜகவினர் முகாமிடுகின்றனர். இந்திய அரசியலமைப்பு நாளான நவம்பர் 26 வரை நடைபெறும் இந்த முகாமுக்கு ‘சம்பர்க் அபியான்’ (தொடர்பு இயக்கம்) என்று பெயரிட்டுள்ளனர். இதில் பாஜக எஸ்சி பிரிவினர் அப்பகுதிகளுக்கு சென்று தலித் மக்களிடம் பேசி குறைகளை கேட்க உள்ளனர். இந்த சந்திப்புகள் மொத்தம் 70 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளன.
இதுகுறித்து பாஜக எஸ்சி பிரிவின் தேசியத் தலைவர் லால் சிங் ஆர்யா கூறும்போது, ‘‘இந்த சந்திப்புகளில் அரசு சார்பில் தலித்துகளுக்கான கல்வி, வளர்ச்சி மற்றும் தொழில் திட்டங்களின் சலுகைகள் குறித்தும் எடுத்துரைப்பார்கள். இதை பெறுவதில் எழும் சிக்கல்களையும் உடனடியாகத் தீர்த்து வைக்க உள்ளோம். மாணவ, மாணவிகள் தங்கியுள்ள 7,500 அரசு விடுதிகளுக்கும் நேரில் சென்று சந்தித்து பேச உள்ளோம்’’ என்றார்.
பிரச்சினைகளை தீர்க்க குழு
இந்த சந்திப்புகளின் போது தலித் மக்களுக்கு எழும் பிரச்சினைகளை தீர்த்து வைக்க 5 பேர் கொண்ட குழுக்கள் ஒவ்வொரு பகுதிக்கும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தப் பணிகளால் பாஜகவுக்கு 2024 மக்களவை தேர்தலில் தலித் மக்களின் ஆதரவு வாக்குகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தலித் மக்களுக்கு பாஜக மீதுள்ள தவறான கருத்துகளும் விலகும் என்று கட்சி தலைமை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த 2019 மக்களவை தேர்தலில் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் தலித்தின் ஒரு பிரிவான ஜாத்தவ் சமூக வாக்குகள் பாஜகவுக்கு 13 சதவிகிதம் அதிகரித்திருந்தது. மேற்குவங்க மாநிலத்திலும் தலித்துகளின் வாக்குகள் பாஜகவுக்கு சுமார் 18 சதவிகிதம் கிடைத்திருந்தன.
இதற்கு காரணம் தலித்துகளுக்காக பாஜக தலைமையிலான மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதே என்று பாஜகவினர் கூறுகின்றனர்.
தனி பொதுச் செயலாளர்
பாஜகவின் தேசிய அமைப்பில் தலித் பிரிவினருக்காக ஒரு பொதுச்செயலாளர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடுகள் மாநிலங்கள் மற்றும் மாவட்ட அளவுகளிலும் தலித்துகளுக்காக உள்ளன. மத்திய அமைச்சரவையிலும் தற்போது 12 தலித் அமைச்சர்கள் உள்ளனர். நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாஜகவுக்கு இருந்த 5 தலித் எம்.பி.க்களின் எண்ணிக்கை தற்போது 7 என உயர்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.