இந்திய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் நியூசிலாந்து ஏ அணி 237 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

பெங்களூரு,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து ஏ அணி, பிரியங் பஞ்சல் தலைமயிலான இந்திய ஏ அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று உள்ளது. முதல் 2 போட்டிகள் டிராவில் முடிந்த சூழலில் 3-வது டெஸ்ட் பெங்களூருவில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ருதுராஜ் கெய்க்வாட்-யின் சதத்தால் முதல் இன்னிங்சில் 293 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இவருக்கு ஒத்துழைப்பு அளித்த உபேந்திரா யாதவ் 76 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில் இந்திய ஏ அணி 86.4 ஓவர்களில் 293 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.

நியூசிலாந்து ஏ அணியில் மேத்யூ பிஷர் அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த நிலையில் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து ஏ அணி தங்கள் முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரக்கள் ஜோ கார்டர் 8 ரன்களிலும் ரசின் ரவீந்திரா 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

தொடக்கத்தில் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்த நியூசிலாந்து ஏ அணி பின்னர் மார்க் சாப்மேன் மற்றும் சீன் சோலியாவின் அபார ஆட்டத்தால் மீண்டு எழுந்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்க் சாப்மேன் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். சீன் சோலியா 54 ரன்களில் நடையை கட்டினார்.

இறுதியில் நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்சில் 237 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் சவுரப் குமார் 4 விக்கெட்களையும், ராகுல் சஹால் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 56 ரன்கள் முன்னிலை உடன் 2-வது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்துள்ளது.

கேப்டன் பிரியங் பஞ்சல் 17 ரன்களுடனும் ருதுராஜ் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 96 ரன்கள் முன்னிலை பெற்று உள்ள நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.