பெங்களூரு: கர்நாடக சட்ட மேலவையில் காங்கிரஸ், மஜதவின் எதிர்ப்பை மீறி மதமாற்ற தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இதையடுத்து முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைப் போல கர்நாடகாவிலும் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ், மஜதவின் எதிர்ப்பைமீறி கடந்த டிசம்பரில் மதமாற்ற தடை சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. அப்போது பாஜகவுக்கு சட்ட மேலவையில் பெரும்பான்மை இல்லாததால் இந்த மசோதா அங்கு தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த மாதம் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தலில் வென்றதன் மூலம் மேலவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்தது.
இந்நிலையில் நேற்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா சட்ட மேலவையில் ‘கர்நாடக மத சுதந்திர உரிமை சட்ட மசோதா 2021’ என்ற பெயரிலான மதமாற்ற தடை சட்டத்தை தாக்கல் செய்தார். அப்போது அரக ஞானேந்திரா, ”இந்த சட்டம், சட்ட விரோத கட்டாய மத மாற்றத்தை தடுக்கவே கொண்டுவரப்படுகிறது. இந்த புதிய சட்டத்தின் கீழ் மதமாற்றம் செய்வோருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்க முடியும். 18 வயதுக்கும் குறைவானவரை மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். அபராதம் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விதிக்கப்படும். இதே குற்றத்தை மீண்டும் செய்தால் ரூ. 2 லட்சம் வரை அபராதம் சிறை தண்டனை விதிக்கப்படும்” என்றார்.
எதிர்க்கட்சிகள் கண்டனம்
இது அரசியல் சாசனத்துக்கு எதிரான மசோதா என்று சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பி.கே.ஹரிபிரசாத் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக காங்கிரஸ் எம்எல்சி விஸ்வநாத், ‘‘இந்த சட்டம் இந்திய அரசிய லமைப்பு சட்டத்தின் 25,26,15, 29ஆகிய பிரிவுகளுக்கு எதிரானது. சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கு இந்த சட்டத்தை பாஜக கொண்டு வருகிறது” என்றார்.
அதற்கு கர்நாடக சட்ட அமைச்சர் ஜே.சி. மதுசாமி, ‘‘பாஜக இந்து மதத்தைப் பாதுகாக்க விரும்புகிறது. கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பதில் உறுதியாக இருக்கிறோம். அதேவேளையில் பிற மதத்தினரின் உரிமையை நாங்கள் பறிக்கவில்லை”என்றார்.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காங்கிரஸில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் இணைந்து எம்எல்சியாகியுள்ள விஸ்வநாத் பேசுகையில், ”இந்து மதத்தில் சாதி கொடுமை நீடிப்பதாலே இந்துக்கள் மதம் மாறுகின்றனர். தீண்டாமை போன்ற கொடிய பிரச்சினைகளை தடுக்காமல் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவருவது தேவையற்றது” என விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
காங்கிரஸ், மஜத ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுமார் 7 மணி நேரம் இந்த மசோதாவை கொண்டுவர வேண்டாம் என வலியுறுத்தினர். அவர்களின் எதிர்ப்பை மீறி, குரல் வாக்கெடுப்பின் மூலம் கர்நாடக மேலவையில் மதமாற்ற தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.