“நம்மூர் விஞ்ஞானி விரைவில் ஜெயிலுக்கு செல்வது உறுதி" – செந்தில் பாலாஜியை சாடிய எம்.ஆர்.விஐயபாஸ்கர்

தமிழ்நாடு முழுவதும் அறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கரூர் புலியூர் பகுதியில் கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அ.தி.மு.க போக்குவரத்து துறை அமைச்சரும், அ.தி.மு.க கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அப்போது பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், “தமிழக மக்களை ஏமாற்றிய மு.க.ஸ்டாலின் மக்களின் குறைகளை கேட்டறிவதாக, ஒரு நாடகத்தினை நடத்தி பெட்டி பெட்டியாக மனுக்கள் வாங்கினார். தற்போது அந்த பெட்டியின் சாவியை மறந்து விட்டார். அவரை தொடர்ந்து, ஸ்டாலின் மகனும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி மக்களிடம் வாக்குகளை பெறுவதற்காக நாடகமாடினார். தற்போதும் நீட் தேர்வினை ரத்து செய்வோம் என்று மக்களிடம் பொய் கூறி ஏமாற்றி வருகின்றார்.

இங்கு ஒரு அமைச்சர் இருக்கின்றார். ஏற்கனவே அவர் விஞ்ஞான ரீதியான முறையில் முறைகேடு செய்ததாக, தற்போதைய முதல்வர் அன்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். ஆனால், அவருக்கே தற்போது அமைச்சர் பதவியும் கொடுத்து உள்ளார் ஸ்டாலின். அங்கேயும் கிச்சன் கேபினட் முறையில் பதவி வாங்கி வருகிறார். மு.க.ஸ்டாலின் மருமகனை பிடித்து தற்போது அமைச்சர் பதவியை பிடித்துள்ளார். நமது எதிர்கட்சித்தலைவரும், அ.தி.மு.க கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ஏற்கனவே சொன்னது போல சொத்துவரியை ஏத்தி விட்டார்கள், மின்சார கட்டணம் விலை உயர்வு மக்களுக்கு அடுத்த தி.மு.க அரசின் பம்பர் பரிசு. பஸ் கட்டண உயர்வு அடுத்து மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்க காத்து கொண்டிருக்கின்றது.

மேலும், போக்குவரத்து துறையில் மெஷின்களில் முறைகேடு செய்து பல கோடி சுருட்டிய நம்மூர் விஞ்ஞானி (செந்தில்பாலாஜியை குறிப்பிட்டு) தி.மு.கவிற்கு சம்பாதிப்பதற்காக, அடுத்து மின்சாரத்துறையில் ஓவ்வொரு வீட்டிற்கும், மின் கட்டணத்தினை அறியும் மீட்டரில் டிஜிட்டல் முறை என்று கூறி ஸ்மார்ட் மீட்டர் ஒன்றினை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் கோடிகளை சுருட்ட பிளான் செய்துள்ளார். ஆனால், ஏற்கனவே போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துள்ளதை தற்போது உச்ச நீதிமன்றமே தூசி தட்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றது.

நிகழ்ச்சிக்கு வந்த கூட்டம்

ஆகையால், நம்மூர் விஞ்ஞானி விரைவில் ஜெயிலுக்கு செல்வது உறுதி. நம் கட்சியினை அழிக்க தி.மு.க கட்சி சதி செய்து வருகிறது. நம் அ.தி.மு.க கட்சி எப்போதும் ஒற்றைத்தலைமை தான் அது, எடப்பாடி மட்டுமே. ஒரு சிலர் பேர் தர்மயுத்தம் என்று சொல்லி நாடகமாடினார்கள். உண்மை தொண்டர்கள் நம் இயக்கத்தின் விரோதிகளான தி.மு.க கட்சியுடன் உறவாட மாட்டார்கள். தி.மு.க கட்சியையும், ஆட்சியையும் புகழ்ந்து சொல்பவர்கள் நம் இயக்கத்திற்கு துரோகம் செய்பவர்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அன்றே சொன்னார். தீய சக்தி கருணாநிதி, தி.மு.க என்றுமே மக்களுக்கு எதிரானவர்கள். அவரின் கூற்றுக்கும், நம் புரட்சிதலைவி ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்து விட்டு, அவர்களோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளவர்களும் நம் இயக்கத்திற்கு எதிரானவர்கள்தான். அதேபோல், எக்காரணத்தை கொண்டும் மன்னார்குடி கும்பல் சசிகலாவுடன் யாரும் தொடர்பு வைத்த கொள்ள கூடாது என தெரிவித்த பன்னீர்செல்வம் இன்று மன்னார்குடி கும்பலுடன் தொடர்பில் இருப்பதோடு, தேவைப்பட்டால் டி.டி.வி.தினகரனையும் சசிகலாவையும் சந்திப்பேன் என கூறி வருகிறார்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.