புதுடெல்லி: கியூட் நுழைவு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான கியூட் தேர்வை ஒன்றிய அரசு நடத்துகிறது. இந்த கல்வி ஆண்டுக்கான இளங்கலை படிப்புக்கான இத்தேர்வு கடந்த ஜூலை 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை 6 கட்டங்களாக நடைபெற்றது. நாட்டின் அனைத்து ஒன்றிய பல்கலைக் கழகங்கள் உள்பட 91 பல்கலை. களில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த முடிவுகள் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கியூட் இளங்கலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நேற்று அதிகாலை வெளியிட்டது. இதில், 30 பாடங்களில் 20 ஆயிரம் மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர். குறிப்பாக, ஆங்கில பாடத்தில் 8 ஆயிரத்து 236 பேரும், அரசியல் பாட திட்டத்தில் 2 ஆயிரத்து 65, வணிகப் பிரிவில் ஆயிரத்து 669 பேரும் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.
என்டிஏ.வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதால் பல்கலைகழகங்கள் கட் ஆப் பட்டியலை தயாரித்து வருகின்றன. இந்த முறை டெல்லி பல்கலைக் கழகம் உள்பட அனைத்து பல்கலைக் கழகங்களிலும் மாணவர் சேர்க்கை கியூட் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்தார்.