தமிழ்நாடு மின்வாரியம், 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடனில் தத்தளிப்பதால், கடனை சமாளிக்கும் பொருட்டு, மின் கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை எடுத்துவந்தது. இதற்காக, மின் பயன்பாடு, புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணங்களை உயர்த்தித் தரக் கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த ஜூலை 18-ம் தேதி மின்வாரியம் அறிக்கை சமர்ப்பித்தது. மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து மக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டங்களில், சுமார் 4,500-க்கும் மேற்பட்டோர் கட்டண உயர்வுக்கு எதிராக மனுக்கள் அளித்திருந்த நிலையில், மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. செப்டம்பர் 10-ம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கும் வந்துவிட்டது.
மின் கட்டன உயர்வு குறித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், தொழில் அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் வலுவான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி 16-09-2022 காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று, கோவை, திருப்பூர் மாவட்டகூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிஉரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.
நிலைமை இவ்வாறு இருக்க, , “லாபமே இல்லாத தொழிலாக சிறு, குறு தொழில்கள் மாறியிருக்கிறது. இந்த காலகட்டத்தில் வைக்கும் சுமை தாங்க கூடிய சுமையா என்று பார்க்க வேண்டும். எதையும் பார்க்காமல் வைத்தால் என்ன செய்வது. நஷ்டம் எங்கு வருகிறது என்று பார்ப்பது அவர்கள் பொறுப்பு. நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யாமல், இருக்கும் எல்லா தொழிலையும் அழித்தால் எப்படி. அதைதான் இன்றைய அரசில் நடத்துகிறார்கள்” என்கிறார் தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ்.
மேலும் தொடர்ந்தவர், “கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு, ரா மெட்டீரியல் விலை, ஜி.எஸ்.டி-யில் இருக்கும் குளறுபடி… என நெருக்கடியான காலத்தில் தொழில்கள் எல்லாம் புரட்டி போட்டுவிட்டது. இது போன்ற சூழலில் வருமானம் என்பது பெரிய அளவில் இல்லாத இந்த காலகட்டத்தில், மின் கட்டணம் உயர்வு இன்னும் எங்களுக்கு பெரும் சுமையாக வந்து நிற்கிறது. யூனிட்டுக்கு மட்டுமில்லாமல் இவர்கள் சொல்லி இருக்கும் 23 வகையான மின்கட்டண உயர்வினை அடிஷ்னல் அடிஷ்னலாக செய்திருக்கிறார்கள். அதன் மூலம் அரசுக்கான வருமானத்தை மட்டுமே பார்க்கிறதே தவிர, சிறு, குறு தொழில்களின் கள எதார்த்தத்தை பார்க்க முன் வரவில்லை.
சிறு, குறு தொழில் நிறுவனங்களால் இழப்பு என்கிறார்கள். ஆனால், என்ன கட்டணம் நிர்ணயம் செய்திருக்கிறார்களோ அதை முழுமையாக கட்டி கொண்டுதான் இருக்கிறோம். எனவே தொழில் துறை நஷ்டத்திற்கு நாங்கள் காரணமில்லை. ஆனால், நஷ்டத்தில் போகிறது என்று சொல்லி கட்டணம் உயர்த்தி இருப்பதை, வாபஸ் வாங்கவில்லை என்றால் பெரிய நெருக்கடி குறுந்தொழில்களுக்கு ஏற்படும். மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து கோவை, சென்னை, மதுரை என மூன்று மண்டலங்களில் நடத்தினார்கள். அதில் கட்டண உயர்வுக்கு நூறு சதவீதம், எல்லா தரப்பினரும் முடியாது, சாத்தியமில்லை என்று தங்கள் கருத்துகளை பதிவு செய்தார்கள். ஆனால், அதற்கு நேர்மாறாக ஒப்புதல் கொடுத்திருப்பதற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்தியிருக்க அவசியமே இல்லை. இது வெறும் கண் துடைப்பு வேலையே.
மின் கட்டண உயர்வுக்காக வரும் 20-ம் தேதி அனைத்து தொழில் அமைப்புகளும், வர்த்தக கூட்டமைப்புகளும் போராட்டத்தில் இறங்க இருப்பதாக இருந்தது. இதற்கிடையில் மின் துறை அமைச்சர் எல்லா சங்கங்களுக்குமான தலைமை அமைப்பை அழைத்து பேசி இருக்கிறார். அந்த பேச்சுவார்த்தைக்கு பிறகுதான் எங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும்” என்றார்.
பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் மின்கட்டணம் உயர்வு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க. அரசு அறிவித்த மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருப்பது, பொதுமக்களுக்கு மட்டுமல்ல, குறு, சிறு, நடுத்தர தொழில் துறையினருக்கும் பேரிடியாக அமைந்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்த சில இடங்களில் மட்டும் கண் துடைப்புக்காக கருத்து கேட்புக் கூட்டங்களை மின் வாரியம் நடத்தியது. அதில் பங்கேற்ற தொழில் துறையினர் குறிப்பாக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்கள், சமூக அமைப்புகள், தொழில்துறையினர் என அனைத்துத் தரப்பினரும், மின் கட்டணத்தை உயர்த்தவே கூடாது என வலியுறுத்தினர்.
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் இந்தச் சூழலில் மின் கட்டண உயர்வு என்பது தாங்க முடியாத சுமையை ஏற்படுத்தும் என, குறு, சிறு, நடுத்தர தொழில்துறையினர் தி.மு.க. அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், மக்கள் மீதும், தொழில் துறையினர் மீதும் கொஞ்சமும் அக்கறையில்லாத, மக்கள் விரோத தி.மு.க. அரசு, விடாப்பிடியாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அது அமலுக்கும் வந்துவிட்டது. மக்களின் கருத்துக்களை, ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்றால் எதற்காக கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும்?
மின் கட்டண உயர்வால் ஜவுளித் தொழிலை கடுமையாகப் பாதிக்கும் என, தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சைமா), தமிழ்நாடு ஒபன் எண்ட் நூற்பாலைகள் சங்கம் (ஓஸ்மா), திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன. மின் கட்டண உயர்வால் நூல் விலை கிலோவுக்கு ரூ. 5 அதிகரிக்கும் என்றும், 25,000 கதிர்கள் கொண்ட நூற்பாலைக்கு, ஆண்டுக்கு ரூ. 1 கோடியே 20 லட்சம் வரை மின் கட்டணம் உயரும் என்று ஜவுளி தொழில்துறை சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே, பருத்தி விலை உயர்வாலும், தட்டுப்பாட்டாலும் ஜவுளித் தொழில் கடும் நெருக்கடியில் உள்ளது. எனவே, இந்நிலைமை சீராகும் வரை, மின் கட்டண உயர்வை தள்ளி வைக்க வேண்டும். மின் கட்டண உயர்வால், சூரிய ஒளி, காற்றாலை போன்ற மரபுசாரா எரிசக்தி துறையில் புதிய முதலீடுகள் வருவதை பாதிக்கும்.
மின் கட்டண உயர்வு தொழில்கள் நிறைந்த கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் போன்ற கொங்கு மண்டல மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கும். எனவே, தொழில்துறையினருக்கு மட்டுமல்ல, வீடுகள், கடைகளுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். மரபுசாரா மின் உற்பத்தியை அதிகரித்தல், மின் வாரியத்தில் ஊழல், முறைகேடுகளை தவிர்த்து நிர்வாகத்தை சீரமைத்தல், தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்காமல் மின் உற்பத்தியை அதிகரித்தல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, மின் வாரியத்தின் நஷ்டத்தை குறைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.