திருக்கொடியலூர் சனீஸ்வரர் கோவில், திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகிலுள்ளது திருக்கொடியலூர்.
இந்த ஊரில் ஶ்ரீ ஆனந்தவல்லி சமேத ஶ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இது யமதர்மனும் சனீஸ்வர பகவானும் அவதரித்த தலம் என்பது விசேஷ தகவல்.
சூரிய பகவான் அவர் மனைவியர்களான உஷாதேவி, சாயாதேவி ஆகிய மூவரும் கூடி ஈசனை ஆராதித்த தலம் இது என்பதால் திருக்கூடியலூர் என்றானது. அதுவே பிற்காலத்தில் மருவி திருக்கொடியலூர் என்றானது என்றும் கூறப்படுகிறது.
மக்களாலும், ஜோதிடர்களாலும் பயமுறுத்தி பேசக்கூடிய சனீஸ்வர பகவான் கொடியவன் என்று அழைக்கப்படுகிறான்.
அந்தக் கொடியவன் ஆகிய சனீஸ்வர பகவான் பிறந்த இடத்திற்கு அந்தப் பெயரையே வைக்கப்பட்டுள்ள தலமாக திருக்கொடியலூர் விளங்குகிறது என்று மற்றொரு செவிவழிச்செய்தியாக கூறப்படுகிறது.
தென் தமிழ்நாட்டின் தேவாரப் பதிகத் தலங்கள் மிகவும் பெருமையும், புகழும் கொண்டவை. இந்த தலங்களை ‘பாடல் பெற்ற தலங்கள்’ என போற்றுகிறோம். அதுபோன்ற ஒரு பாடல் பெற்ற திருத்தலமே திருமீயச்சூர்.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பேரளம் ரயில்வே ஸ்டேஷனுக்கு சிறிது தொலைவில் மேட்டூர் என்ற ஊரில் புராதனமான திருமீயச்சூர் சிவன் கோவில் உள்ளது.
இங்கு ஆதி சக்தியான லலிதா பரமேஸ்வரி தவக்கோலத்தில் மனோன்மணி சொரூபமாக அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறார்.
இங்குள்ள அம்பாள் லலிதாம்பிகை தனது பக்தையிடம் “எனக்கு கொலுசு வேண்டும்”
என்று கேட்டு வாங்கிப் போட்டுக் கொண்ட வரலாறு பற்றி சுருக்கமாக பார்ப்போம்
தனது கனவில் “எனக்கு கொலுசு வேண்டும்” என்று கேட்டுகொண்ட லலிதாம்பிகையின் பக்தை அந்த கொலுசை போடுவதற்கு லலிதாம்பிகையின் இந்த ஆலயத்திற்கு சென்று கொடுத்த போது,கொலுசெல்லாம் போட முடியாது என்று குருக்கள் சொன்னதற்கு, “எனது கனவில் போடலாம்” என்று அம்பாள் சொன்னார் என பதில் கூறினாள்.
நிறைய காலங்களாக அபிஷேக துளிகள் படர்ந்து சிறு துளைகள் எல்லாம் அடைபட்டு இருந்த லலிதாம்பிகையின் கால் பகுதியில் கொலுசு அணிவித்த தடம் போல் ஒரு துளை இருந்ததை அபிஷேகம் செய்யும் பொழுது அர்ச்சகர் கண்டுள்ளார். ஆகையால் அதன் பிறகு அந்த கொலுசை தேவியின் பாதங்களில் அணிவித்து சந்தோஷம் அடைந்தனர்.
இத்தலத்தின் இறைவன் மேகநாத சுவாமி. இவரை வணங்கி நிற்போருக்கு வறுமை நீங்கி செல்வம் மழையாகப் பொழியும். ஒருமுறை இந்த மேகநாத சுவாமியை, வருணனும், சூரியனும் வணங்கி நின்றனர். தங்களுக்கு சாப நிவர்த்தி தர வேண்டும் என்று வேண்டினர். அவர்களுக்கு மேகநாத சுவாமி சாப நிவர்த்தி கொடுத்தார்.
இதற்கிடையில் சூரியனுடைய பத்தினியான உஷாதேவி, மேகநாதரிடம் ‘தனக்கு புத்திர பாக்கியம் வேண்டும்’ என்று வழிபட்டார்.
அதற்கு இறைவன் அவளது கணவர் சூரியனுடன் இத்தலத்திலுள்ள சூரிய புஷ்கரணியில் நீராடி, அம்பாள் லலிதாவையும், என்னையும் பூஜை செய்து வந்தால் புத்திர பாக்கிய பலன் கிடைக்கும்” என வரம் அளித்தார்.
அதன்படியே சூரியன், உஷாதேவி, இருவரும் திருமீயச்சூர் வந்து சூரிய புஷ்கரணியில் நீராடி பூஜை செய்தனர். நவகிரகங்களில் சூரியன் ஒருவர் மட்டுமே அதீத காம உணர்வு கொண்டவர். அத்தகைய சூரிய பகவான் தவத்தின் வலிமையால் புத்தி பாக்கியத்திற்காக தன் மனைவி உஷாதேவியுடன் உறவு கொள்கிறார்.
சூரியபகவான், உஷாதேவி உடலுறவு கொள்ளும் பொழுது அவரின் காம வெப்பம் தாங்க முடியாமல் குதிரையாக மாறி ஓடுகிறாள் உஷாதேவி.
சூரியபகவானும் குதிரையாக மாறி விரட்டுகிறார். அப்போது உஷாதேவி கருப்பு நிற குதிரை உருவத்தைப் படைத்து மறைந்து விடுகிறாள்.
சூரியபகவான் அந்த கருப்புநிற குதிரையை உறவு கொண்டதால் சனீஸ்வரபகவானும், எமதர்மராஜாவும் மகனாக பிறக்கிறார்கள்.
சூரியபகவானுக்குரிய இந்த வரலாற்று முக்கியத்துவத்தை திருமீயச்சூர்க்கு கொடுக்காமல், அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் மேற்கே உள்ள திருக்கொடியலூர் என்ற ஒரு ஊருக்கு கொடுத்துள்ளார்கள்.
இந்த ஊரில் உள்ள கோவிலில் அகஸ்தீஸ்வரர் என்ற சுவாமியின் ஒருபக்கம் எமதர்மனும் மற்றொரு பக்கம் சனீஸ்வர பகவானும் அங்கு சிவபூஜை செய்வதாகவும், இங்கேயே சனீஸ்வர பகவான் அவருடைய குருவை அதாவது பைரவரை பார்த்துக்கொண்டு இருப்பது போலவும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சனீஸ்வரர் பிறந்த இந்த திருக்கொடியலூரில் சனியினுடைய ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக ஐதீகம்.
திருநள்ளாறில் இருந்து சனீஸ்வர பகவான் உடைய பார்வை இங்கு படுவதாக ஐதீகம். உலகத்தின் நீதிபதி சனீஸ்வர பகவானும் தர்மத்தின் ராஜாவான எமதர்மராஜாவின் பிறந்த தலம் இந்த திருக்கொடியலூர்.
சுவாமியினுடைய வலதுபுறம் சனீஸ்வர பகவானும், இடது புறத்தில் எமதர்மராஜனும் காட்சியளிக்கின்றனர்.
புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள், பிறந்த சிறு குழந்தைக் நீண்ட ஆயுள் வேண்டி இந்த தளத்தில் வழிபட்டால் சனீஸ்வர பகவான் அருள்பாலிக்கிறார் என்று ஒரு ஐதீகம்.. இந்த தலத்தில் பரிவார தேவதைகளாக விளங்கும் யமதர்மனையும், சனிபகவானையும் வழிபட்டால் கால பயமும் சனி தோஷ துன்பங்களும் நீங்கி விடுவதாக ஐதீகம்.
ஒருமுறை இந்திரனைப் பீடித்த சனிபகவான் இங்கு வந்து ஒளிந்திருந்ததாகவும் ஈஸ்வர கிருபையால் அவன் தோஷம் விலகியதாகவும் தலவரலாறு கூறுகிறது. ஒருவருக்கு சனி தோஷம் பிடித்தாலும், எமன் பிடிக்க வந்தாலும் அது வாழ்வில் கஷ்டமான காலம்தான்.
ஆனால் இத்தலத்தில் பிறந்த சனீஸ்வர பகவானும் தர்மத்தின் ராஜாவான எமதர்மராஜாவும், குழந்தையாய், அனைவருக்கும் அருள்தரும் வல்லுநராய், பக்தர்கள் கேட்ட வரத்தைத் தருபவர்களாகவே விளங்குகிறார்கள்.
அதனால்தான் எதையும் எதிர்பாராமல் இந்த தலத்தில் கால் வைத்த உடனேயே நமது வாழ்வில பெரும் மாற்றமும், வளர்ச்சியும்,நாம் வேண்டிய அனைத்துமே கிடைத்து விடுகிறது.
ஹயக்ரீவர் கூறியபடி ஒரு முறை திருமீயச்சூர் வருகை தந்த அகத்தியர், லலிதாம்பிகையை தரிசித்து அங்கு அன்னையை மனதுருக வேண்டி லலிதா நவரத்தின மாலை பாடினார். இதனால் அவருக்கு அம்பாளின் பேரருள் கிடைத்தது. அதன்பின் அவர் சிவபூஜை செய்ய வேண்டும் என்று எண்ணினார். அதற்காக அவ்விடத்தில் இருந்து சற்று மேற்கே உள்ள கூடியலூர் என்ற கொடியலூருக்கு வந்தார். இத்தலத்தில் அவர் சிவலிங்கத்தினை பிரதிஷ்டை செய்தார். இங்குள்ள லிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்ததால் இத்தல இறைவன் ‘அகத்தீஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார்.
தாயார் லலிதாம்பிகையை நினைத்து அன்னையையும் இங்கு அகத்தியர் பிரதிஷ்டை செய்தார். தேடிவந்து வணங்கும் பக்தர்களுக்கு அருள் தரும் அன்னைக்கு ‘ஆனந்தவல்லி’ என பெயரிட்டார். தொடர்ந்து இத்தலத்தில் இறைவனையும், இறைவியையும் நினைத்து தவம் இருந்தார். எமதர்மனும், சனீஸ்வரனும் பிறந்த இந்த திருத்தலத்திற்கு வந்து வழிபடுவோருக்கு, எம வதையும், சனி உபாதையும் நீங்க வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்தித்தார். அதன்படியே அருள்வதாக இறைவனும், அகத்தியருக்கு அருளாசி வழங்கினார்.
திருமீயச்சூர் ஆலயத்தில் லலிதா பரமேஸ்வரி தவக்கோலத்தில், மனோன்மணி சொரூபமாக அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறாள். கொடியலூரில் லலிதா பரமேஸ்வரி ஆனந்தவல்லியாக பரிபூரணமாக காட்சி தந்து அருளாசி வழங்குகிறாள். அன்னை ஒரே எல்லையில் திருமீயச்சூரில் அமர்ந்த கோலமாகவும், கொடியலூரில் நின்ற கோலமாகவும் இருந்து அருள் செய்வது மற்றொரு சிறப்பு.