சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் அருகில் வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாட்டு வரையறைகளை கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் விதித்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் அருகில் ரூ.81 கோடி மதிப்பில் வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கதமிழக அரசு முடிவெடுத்தது.
42 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படும் இந்த பேனா வடிவ சின்னத்துக்கு செல்வதற்காக, நினைவிடத்தில் இருந்து கடற்கரையில் 290 மீட்டர் தொலைவு, கடலில் 360 மீட்டர் தொலை என 650 மீட்டர் தொலைவுக்கு பாலம் அமைக்கப்படுகிறது. இந்தப் பாலம் 7 மீட்டர் அகலத்தில் அமையும். அதில் 3 மீட்டர் கண்ணாடி தளமாக இருக்கும்.
இந்த நினைவிடத்துக்கு மாநில அரசின் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்த நிலையில், மத்திய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்காக அரசு சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் 307-வது கூட்டம் காணொலி வாயிலாக நடந்தது. இதில் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதுடன், திட்டத்துக்கான கட்டுப்பாட்டு வரையறைகளை ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மாநில அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம், இத்திட்டம் தொடர்பாக மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும். அதில் போதியஅளவு மீனவ பிரதிநிதிகளும் இடம்பெற்றிருக்க வேண்டும். பின்னர், இறுதி அறிக்கையை மாநில கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பி, அதன் பிறகு ஆணையத்தின் பரிந்துரையை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.