டெல்லி தொழிலதிபரை மிரட்டி ரூ.215 கோடி பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகர் மிரட்டி பறித்த பணத்தை பாலிவுட் நடிகைகளுக்கு செலவு செய்தது அமலாக்கப்பிரிவின் விசாரணையில் தெரிய வந்தது. இதில் அதிகமாக பயனடைந்த ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் அமலாக்கப்பிரிவு பல முறை விசாரணை நடத்தி இருக்கிறது. ஜாக்குலின் பெர்னாண்டஸ் மட்டுமல்லாது நடிகை நோரா ஃபதேஹியும் சுகேஷிடம் பரிசுப்பொருள்கள் வாங்கி இருக்கிறார். அவரிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்கியுள்ளது. அதோடு சுகேஷ் மீது அமலாக்கப்பிரிவு பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிகை நகலில் இடம் பெற்றுள்ள தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சுகேஷ் சந்திரசேகரின் குற்றப்பின்னணி குறித்து தெரிந்தவுடன் அவனுடனான நட்பை நடிகை நோரா ஃபதேஹி துண்டித்துக்கொண்டார். ஆனால் ஜாக்குலின் பெர்னாண்டஸ் தொடர்ந்து சுகேஷுடன் தொடர்பில் இருந்து வந்ததாக அமலாக்கப்பிரிவு தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் டெல்லி போலீஸார் நடத்திய விசாரணையில் இருவருக்கும் பணமோசடி வழக்கில் நேரடி தொடர்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.
சுகேஷ் தனது பணபலத்தை காட்டி பாலிவுட் நடிகைகளிடம் தனது ஆதிக்கத்தை செலுத்த முயன்றுள்ளான் என்று டெல்லி போலீஸ் சிறப்பு கமிஷனர் ரவீந்தர் தெரிவித்தார். சுகேஷுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த பிங்கி இரானி, நடிகை நோரா மற்றும் அவரின் மைத்துனர் மெக்பூப் பாபி கான் ஆகிய மூன்று பேரையும் நேருக்கு நேர் நிறுத்தி டெல்லி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். சென்னையில் சுகேஷ் சந்திரசேகர் மனைவி லீனா நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நோரா கலந்து கொண்டார். இதற்காக அவருக்கு பிஎம்டபிள்யூ கார் கொடுப்பதாக சுகேஷ் தெரிவித்தான். அதனை வாங்க மறுத்த நோரா தனது மைத்துனரிடம் கொடுத்துவிடும் படி கேட்டுக்கொண்டார். நோராவின் மைத்துனர் மெக்பூப் மொராக்கோ நாட்டை சேர்ந்தவர். அவர் பெரும்பாலும் மும்பையில் தங்கி இருந்து பாலிவுட்டில் பணியாற்றி வந்தார். சன்னி லியோன் நடித்த படம் ஒன்றையும் இயக்கி இருக்கிறார்.
நடிகை ஜாக்குலினிடம் சுகேஷ் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். அதோடு சுகேஷை ஜாக்குலின் கனவு நாயகன் என்று அழைப்பார் என்றும், அவரையே திருமணம் செய்யவும் நினைத்தார் என்று டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.