கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மாமாந்தூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சாதிபதி (34), பெரிய சிறுவத்தூரைச் சேர்ந்த ஷர்புதீன் (38), உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் (34), தொட்டியத்தைச் சேர்ந்த மணி (44) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் லட்சாதிபதி வேலூர் மத்திய சிறையிலும், ஷர்புதீன், சரண்ராஜ், மணி ஆகியோர் கடலூர் மத்திய சிறைச்சாலையிலும் அடைப்பு காவலில் உள்ளனர்.
இவர்கள் வெளியே வந்தால் பொது அமைதி மற்றும் பொது ஒழுங்கைப் பேணுவதற்கு பாதகமான செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால் அவர்களதுநடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, ஓராண்டு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் பரிந்துரை செய்தார்.
இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத், நான்கு நபர்களையும் ஓராண்டு தடுப்பு காவல்சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது அமைதி மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
newstm.in