காபூல்:’பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் – இ – முகமது தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் தான் இருக்கிறார்’ என, ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.
தாக்குதல்
நம் அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசார், 1994ல் போலி ஆவணங்கள் வாயிலாக, ஜம்மு – காஷ்மீருக்குள் நுழைந்த போது, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, அந்த இயக்கத்தின் பயங்கரவாதிகள், 1999ல் நம் நாட்டின் பயணியர் விமானத்தை கடத்தினர்.
மசூத் அசார் உட்பட மூன்று பயங்கரவாதிகளை விடுவித்தால் மட்டுமே, பயணியரை விடுவிப்போம் என்றனர். இதையடுத்து, அசார் விடுவிக்கப்பட்டார்.இதைத் தொடர்ந்து, 2001ல் நம் நாட்டு பார்லி., மீது, ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக, இந்தியா உட்பட உலக நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்ததால், மசூத் அசாரை வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக, பாகிஸ்தான் அரசு அறிவித்தது. ஆனால், லாகூர் நீதிமன்றம் அவரை விடுவித்து விட்டது.இந்நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், 2019ல் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது. இதைஅடுத்து, அசாரை ஒப்படைக்கும்படி இந்தியா வேண்டுகோள் விடுத்தது.
பயங்கரவாத பட்டியல்
ஆனால், அசார் பாகிஸ்தானில் இருந்து தப்பிச் சென்று விட்டதாகவும், அவரை தேடி வருவதாகவும் பாகிஸ்தான் கைவிரித்தது.இந்நிலையில், மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருப்பதாகவும், அவரை கைது செய்யும்படியும், பாகிஸ்தான் அரசு, சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு கடிதம் அனுப்பியது.
இதற்கு, அந்நாட்டை ஆளும் தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் அளித்துள்ள பதில்: ஜெய்ஷ் – இ – முகமது தலைவர் மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இல்லை. அவர் பாகிஸ்தானில் தான் இருக்கிறார். சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இருக்கும் அசாரை, தங்கள் நாட்டுக்குள் வைத்துக் கொண்டு, சர்வதேச நிதியுதவி பெற முடியாமல் பாகிஸ்தான் தவிக்கிறது. இதனால், அசார் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக கடிதம் எழுதி, தப்பிக்கப் பார்க்கிறது. இந்தச் செயல், இரு நாடுகளின் உறவையும் பாதிக்கும்.இவ்வாறு, அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement