கரூர் மாவட்டம் காந்திகிராமம் பகுதியில் வசித்து வரும் சபரி (எ) சௌமியா என்ற பெண் பல்வேறு மோசடிகளில் ஈடுப்பட்டுள்ளார். மோசடியில் ஈடுபட்ட இந்த பெண் கரூர் பகுதியில் பதுங்கி இருப்பதை தெரிந்துக்கொண்ட பாதிக்கப்பட்டவர்கள், சௌமியா -வை கண்டறிந்து குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கரூரைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சிவக்குமார் கூறுகையில்,
மின் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சௌமியா பலரிடம் பண மோசடி செய்துள்ளார். குறிப்பாக மின்துறை அமைச்சர் தனது உறவினர் என கூறி வேலை வாங்கி தருவதாக திருச்சி, கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 50-க்கு மேற்ப்பட்டோரிடம், 10 லட்சத்திற்கு மேல் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார்.
இந்த பெண் இவ்வாறு பல பொய்களை கூறி 8 நபர்களை திருமணம் செய்துள்ளார். ஏற்கெனவே திருமணம் முடிந்து கணவரை விட்டு பிரிந்து வாழ்வதாகவும், மறு திருமணத்திற்கு தான் தயாராக இருப்பதாகவும் சௌமியா தெரிவித்து என்னையும் திருமணம் செய்ய முயன்றார்.
தன்னை திருமணம் செய்து கொண்டால் எனக்கும் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறினார். மேலும் எனது நண்பர்களுக்கும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி முன்பணமாக 10 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டார்.
திருமணத்திற்கு முன்பு பெண்ணை பற்றி விசாரிக்க பெண்ணின் புகைப்படம் கொடுத்து உறவினரிடத்தில் விசாரித்து கூறச்சொன்னேன். என் உறவினர் அப்பெண் முன்னதாக தனது குடும்பம், வீடு எனக் கூறிய வீடிற்கு சென்று விசாரித்தனர். ஆனால் அங்கு வசிப்பவர்களுக்கு அப்பெண் யார் என்று தெரியவில்லை.
இதனால் என் உறவினர்கள் என்னை எச்சரித்தனர். பின்னர் சௌமியா குறித்து விசாரித்தபோதுதான் அவர் இதற்கு முன்பு 8 பேரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார் என்பது தெரிய வந்தது.
இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இது குறித்து கரூர் குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் சுகுமார், நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ், ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.