கோவை: தமிழகத்தில் ஏழைகளை பாதிக்காத வகையில் மின் கட்டணம் மாற்றிஅமைக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கோவையில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான காலை நேர சிற்றுண்டி திட்டத்தை தொடங்கிவைத்த பின்னர் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மின் கட்டண மாற்றத்தின்விளக்கம் தெளிவாக ஒப்பீடுகளுடன் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அதை படித்துப் பார்த்தாலே புரியும். அதிமுக ஆட்சியில் 64முதல் 138 சதவீதம் வரை மின்கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.
மொத்தமுள்ள 2.37 கோடிமின் நுகர்வோரில் ஒரு கோடி மின்நுகர்வோருக்கு எந்த கட்டணமும் இல்லை. 63 லட்சத்து 35 ஆயிரம் மின் நுகர்வோருக்கு 2 மாதங்களுக்கு ரூ.55 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு உயர்த்த திட்டமிடப்பட்ட கட்டணம், ரூ.3,217 கோடி தொகையை குறைத்து நிர்ணயம் செய்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சிறு,குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவான மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எச்.டி தொழிற்சாலைகளுக்கும் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழகத்தில் குறைந்தமின் கட்டணமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விசைத்தறிகளுக்கு இந்தியாவிலேயே குறைந்த மின் கட்டணம் தமிழகத்தில் தான் அளிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் விசைத்தறிகளுக்கு எச்.டி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் விசைத்தறிகளுக்கு அந்தகட்டணம் இல்லை. விசைத்தறிகளுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
25 சதவீதம் மட்டுமே மின்உற்பத்தி செய்கிறோம். மற்றவற்றை வெளியில் இருந்துதான் வாங்குகிறோம். 2006-11 ஆட்சியில் திட்டமிடப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதம் 800 மெகா வாட்மின் உற்பத்தி திட்டம் செயல்பாட்டுக்கு வரும். 316 துணை மின் நிலையங்கள் ஒப்பந்தப்புள்ளி நிலைக்கு வந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.