ஆத்தூர்: திண்டுக்கல்லில் ஓசியில் பீடி கொடுக்காததால் ஆத்திரமடைந்த இளைஞர், கடைக்காரருக்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை தீ வைத்து எரித்துள்ளார்.
பழிக்கு பழி வாங்கும் மனப்பான்மை மனிதர்களிடம் அதிகரித்து வருகிறது. கொலைக்கு கொலை, ரத்தத்துக்கு ரத்தம் என்ற கலாச்சாரம் இன்றைய இளைஞர்களிடம் பெருகி வருகிறது. மேற்குறிப்பிட்ட பழிவாங்கல்களையாவது குற்றவாளிகள் ஓரளவுக்கு நியாப்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால், மிக அற்பமான விஷயங்களுக்கு எல்லாம் பழிவாங்குகிறேன் என்ற பெயரில், நம் மக்கள் செய்யும் சேஷ்டைகள் வரம்பு மீறி சென்று கொண்டிருக்கிறது. லிஃப்ட் கொடுக்காமல் சென்றதற்காக சம்பந்தப்பட்டவரின் பைக்கை தேடி வந்து சேதப்படுத்துவது; கடன் கிடையாது எனக் கூறியதற்காக கடையை அடித்து நொறுக்குவது என்பன போன்ற சம்பவங்கள் நம் நாட்டில் நடந்து வருவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இவை அனைத்துக்கும் மேலான ஒரு பழிவாங்கல் சம்பவம் திண்டுக்கல்லில் நடைபெற்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அழகர்நாயகன் பட்டியைச் சேர்ந்தவர் அஜித் (28). இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். மேலும், பகுதிநேரமாக ஆக்டிங் டிரைவராகவும் பணியாற்றி வருகிறார். அவ்வாறு அவர் ஆக்டிங் டிரைவராக செல்லும் போது, அவரது தாய் முருகேஸ்வரி கடையை கவனித்துக் கொள்வார். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி அஜித் ஆக்டிவ் டிரைவர் வேலைக்காக சென்றுவிட்டார். இதனால் முருகேஸ்வரி கடையில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முனீஸ் (32) என்பவர் கடைக்கு வந்து ஒரு பீடி தருமாறும், பிறகு ரூபாய் தருகிறேன் எனவும் கூறியிருக்கிறார்.
ஆனால் இதனை ஒப்புக்கொள்ளாத முருகேஸ்வரி, பணம் தந்துவிட்டு பீடி வாங்கிக் கொள்ளுமாறு கூறிவிட்டார். இதனால் மிகுந்த ஆத்திரமடைந்த முனீஸ், வீட்டுக்குச் சென்று முருகேஸ்வரியை எப்படி பழிவாங்கலாம் என யோசித்தார்.
அதன்படி, அன்றைய தினம் இரவில் யாரும் இல்லாத நேரத்தில், முருகேஸ்வரியின் மகன் அஜித்துக்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை முனீஸ் பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டு தப்பினார். இதில் சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் தீப்பற்றி எலும்புக் கூடானது.
விஷயம் அறிந்து வெளியே வந்த அஜித், தனது கார் எரிவதை பார்த்து கதறி அழுதுள்ளார். பின்னர், அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராவை பார்த்த போது, முனீஸ் அங்கும் இங்கும் நடமாடியது தெரியவந்தது.
இதையடுத்து, முனீஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அஜித் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகிய முனீஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.