“இதயமே இல்லாமல் கட்டணத்தை ஏற்றிவிட்டு, `கனத்த இதயம்’ என்ற கதையை ஏற்கமுடியாது" – அண்ணாமலை

தமிழ்நாடு மின்சார வாரியம், 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடனில் தத்தளிப்பதைச் சமாளிப்பதற்காக, கடந்த ஜூலையில் மின்கட்டணத்தை உயர்த்த முடிவுசெய்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது. அப்போதே அதற்கு எதிர்ப்புகள் எழுந்தபோதிலும், தமிழ்நாடு மின்வாரியம் செப்டம்பர் 10-ம் தேதி முதல் புதிய மின்கட்டண உயர்வை அமலுக்குக் கொண்டு வந்தது.

மின்வாரியம்

அரசின் இத்தகைய முடிவுக்கு அரசியல் கட்சிகள் பலவும் பல்வேறு கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் முன்வைத்தன. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மின்கட்டண உயர்வைக் கண்டித்து `தமிழக ஆளும் கட்சியின் திறமையின்மையால் தத்தளிக்கும் மின்துறை, இருளில் மூழ்கும் தமிழக மக்கள்’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அண்ணாமலை

அந்த அறிக்கையில், “இந்தக் கட்டண உயர்வு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக இருப்பதால், ஏழை, நடுத்தர மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். மின் கட்டணத்தைத்தொடர்ந்து புதிய இணைப்பு, சேவை கட்டணம் இரு மடங்காக உயர்வு. இதையே மாற்று அரசுகள் செய்திருந்தால் மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்திருக்கும் திமுக. ஆட்சியில் இருக்கும்போது, கனத்த இதயத்துடன் மின்கட்டணத்தை ஏற்றுகிறார்களாம்… இதயமே இல்லாமல் மக்கள் மீது கட்டணத்தை ஏற்றிவிட்டு, கனத்த இதயம், என்ற கதையை ஏற்கமுடியாது. திமுக அரசின் திறமையின்மையால், தவறுகளால் ஏற்ப்பட்டிருக்கும் இழப்பினையெல்லாம் மக்கள் தலை மீது சுமத்தலாமா? இதை பாஜக கடுமையாகக் கண்டிக்கிறது.

அண்ணாமலை அறிக்கை

திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம் ஒருமுறை மின்சார பயன்பாடு கணக்கிடப்பட்டு மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்று, தன் தேர்தல் அறிக்கையில் திமுக தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தது. இப்போது இரண்டு மாதத்துக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிப்பது மக்களை வஞ்சிக்கும் செயலாகும். தமிழக அரசு இந்த முறையை மாற்றி, மாதாந்திர மீட்டர் ரீடிங் செய்ய வேண்டும். தயவு செய்து மக்கள் அனைவரும் ஆளும் திமுக அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும், மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேண்டுகிறேன்.

ஸ்டாலின் – அண்ணாமலை

தமிழக அரசின் தவறுகளால், நிர்வாகச் சீர்கேட்டால், ஊழல் டெண்டர்களால், முறைகேடுகளால் ஏற்படும் இழப்பை மக்கள் மீதா திணிக்க வேண்டும். மின் கட்டண உயர்வு பொதுமக்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் மீதான கடுமையான தாக்குதல். ஆகவே, தமிழக அரசு மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மின்சாரம் மக்களுக்கு ஒளியூட்ட வேண்டுமே தவிர இருளில் தள்ளக் கூடாது. திமுக அரசின் இரண்டு மாத கட்டண சுமைக்கும், கூடுதலாக அதிகரித்த மின்கட்டணத்திற்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்” என அண்ணாமலை கூறியிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.