தெஹ்ரான்: ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண்ணை கைது செய்த போலீசார் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் கோமா நிலைக்கு சென்ற இளம்பெண் மருத்துவமனையில் பலியானார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்லாமிய நாடுகளில் ஒன்றாக ஈரான் உள்ளது. இங்கு பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இங்கு 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் முதல் பெண்கள் அனைவரும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பொதுவெளியில் பெண்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
இதற்கு ஈரானில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. குறிப்பாக ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கொடூர தாக்குதல்
இதற்கு மத்தியில் ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் கூட நடக்கிறது. இதனால் பல மனித உரிமைகள் அமைப்பினர் ஈரானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் ஹிஜாப் அணியாத பெண்ணை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கி கொலை செய்தது கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
22 வயது இளம்பெண்
குர்திஸ்தானை சேர்ந்தவர் மாஷா அமினி (வயது 22). இவர் தனது குடும்பத்துடன் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ஈரானில் பொதுவெளியில் பெண்கள் ஹிஜாப் அணிவதை கண்காணிக்கும் வகையிலான நீதிநெறியை கடைப்பிடிக்க செய்யும் கலாச்சார போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தெஹ்ரான் செல்லும் வழியில் மாஷா அமினி மற்றும் குடும்பத்தினரை கலாச்சார போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சரமாரியாக தாக்கிய போலீசார்
மேலும் மாஷா அமினி ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி அவரை கலாச்சார போலீசார் அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். அங்கு வைத்தும் போலீசார் தலையில் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மயங்கியுள்ளார். இதனால் பயந்துபோன போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோமா நிலைக்கு சென்று இறப்பு
மாஷா அமினியை மருத்துவமனையில் போலீசார் பரிசோதித்தனர். அப்போது அவர் கோமா நிலைக்கு சென்றது தெரியவந்தது. மேலும் தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் தான் மாஷா அமினி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உலகின் பிற மனித உரிமை அமைப்புகள் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.