சேலம்: இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் பசுமையோடு ரம்மியமான சூழலை உருவாக்கி பக்தர்கள் வழிபடும் வகையில் தலவிருட்ச மரங்கள் நடப்பட்டு வருகிறது. இதன்படி சேலம் மண்டலத்தில் 3ஆயிரம் தல விருட்சமரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கோயில்கள் உள்ளன. இதில் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் வரும் கோயில்கள் முதல் நிலை கோயிலாகவும், ரூ.5 லட்சம் வரை வருவாய் வருபவை இரண்டாம் நிலை கோயில் என்றும், ரூ.1 லட்சம் வரை மூன்றாம் நிலை கோயில் என்று தரம் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோயில்களிலும் அந்த மூலவரை மையமாக கொண்டு தல விருட்ச மரம் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதாவது சிவன் கோயில் என்றால் வில்வம், கொன்றை, வன்னி, மகிழ் மரமும், அம்மன் கோயில் என்றால் அரசமரம், வேப்பமரமும், விநாயகர் கோயிலில் அரச மரமும் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. பெருமாள் கோயில்களில் சந்தனம், அத்தி மரங்களும் தலவிருட்ச மரங்களாக உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த தல விருட்ச மரங்களை வணங்கிச்செல்கின்றனர்.
இந்நிலையில் கோயில்களில் பசுமையோடு ரம்மியமான சூழலை உருவாக்கி பக்தர்கள் வழிபடும் வகையில் தலவிருட்ச மரக்கன்றுகள் நடுவதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் ஒரு லட்சம் தலவிருட்ச மரங்கள் நடப்படும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் கோயில்களில் அந்தந்த கோயிலுக்குரிய தல விருட்ச மரக்கன்றுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மண்டலத்தில் உள்ள கோயில்களிலும் தல விருட்ச மரக்கன்றுகள் நடும் மும்முரமாக நடைபெற்று வருவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அறநிலையத்துறை சேர்ந்த சேலம் மண்டல அதிகாரிகள் கூறியதாவது: இந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டலம் சேலம், தர்மபுரி மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாவட்டங்களில் 2 ஆயிரத்து 550க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கோயில்கள் உள்ளன. இந்த கோயில் வளாகம் மற்றும் காலி இடங்களில் பல வகையான மரங்கள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோயில்களில் ஒரு லட்சம் தல விருட்ச மரக்கன்றும் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் அந்தந்த கோயில்களுக்குரிய தல விருட்ச மரங்கள் நடப்பட்டு வருகிறது. கோயில்களில் மா மரம், புங்கமரம், வில்வமரம், செண்பகம் மரம், மருதம் மரம், அரச மரம், வேப்ப மரம் உள்பட பல்வேறு வகையான தல விருட்ச மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. பல கோயில்களில் தல விருட்ச மரங்கள் இருந்தாலும் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளன. எனவே அதுபோன்ற கோயில்களிலும் தலவிருட்ச மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகிறது. கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.
சேலம் மண்டலமான சேலம், தர்மபுரிக்கு 5 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 3 ஆயிரம் தல விருட்ச மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 ஆயிரம் மரக்கன்றுகள் இன்னும் ஓரிரு மாதத்தில் நடப்படும். இந்த தல விருட்ச மரங்களை கோயில் பணியாளர்கள் தினசரி பராமரிப்பார்கள். அந்த மரத்தை சேதப்படுத்தாமல் இருக்க சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டு, தினசரி தண்ணீர் ஊற்றப்படும். இந்த தல விருட்ச மரங்கள் வளர்ந்தபிறகு மரத்தின் பெயர் பலகையில் எழுதி வைக்கப்படும். மரத்தை வணங்கினால் ஏற்படும் பயன்கள் குறித்தும் பலகையில் குறிப்பிடப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.