தேசம் விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் ஓட்டு வங்கி அரசியல் காரணமாக இங்கு ஆட்சி செய்தவர்கள், ஹைதராபாத் விடுதலை தினத்தை கொண்டாட தயாராக இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்த பின், பல சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டு ஒரே நாடாக உருவானது. நிஜாம் ஆட்சியாளர்கள் வசம் இருந்த ஹைதராபாத், 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி இந்தியாவுடன் இணைந்தது. இதை ஹைதராபாத் விடுதலை தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்றனர்.
இந்தாண்டு பாஜகவும், ‘ஹைதராபாத் விடுதலை தினம்’ என்ற பெயரில் மாநிலம் முழுதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று ஹைதராபாத் வந்தார். செகந்திராபாதில் உள்ள ராணுவ மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். மேலும் இந்த விழாவில், மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
நாடு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றாலும், ஹைதராபாத்தை நிஜாம்கள் ஆட்சி செய்தனர். 13 மாதங்கள் நிஜாம்களின் அடியாட்களுக்கு மக்கள் பயப்பட்டு வந்தனர். ஹைதராபாத் விடுதலை தினத்தை அதிகாரப்பூர்வமாக கொண்டாட வேண்டும் என மக்கள் விரும்பினர். அந்த தினத்தை கொண்டாடுவதாக பல அரசியல் கட்சிகள் உறுதி அளித்தன. ஆனால், ஆட்சிக்கு வந்ததும் ஓட்டு வங்கி அரசியல் காரணமாக ஹைதராபாத் விடுதலை தினத்தை கொண்டாடுவதில்லை.
நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளாகியும் ஓட்டு வங்கி அரசியல் காரணமாக, இந்த பகுதியை ஆட்சி செய்தவர்கள், கொண்டாட தயாராகவில்லை. தெலங்கானா, ஹைதராபாத் – கர்நாடகா, மரத்வாடா மக்கள், இந்த பகுதியில் இருந்த கொடுமைக்காரர்களின் அட்டூழியத்திற்கு எதிராகவும், இந்தியாவுடன் சேர்வதற்கும் தைரியமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பகுதியை ஆள்பவர்கள் பயம் காரணமாக ஹைதராபாத் விடுதலை தினமாக கொண்டாடாமல் வேறு பெயரில் கொண்டாடுவார்கள். உங்கள் மனதில் இருந்து பயத்தை அகற்றுங்கள் என உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டதால், மக்களை கொடுமை படுத்தியவர்கள் இனிமேல், நாட்டிற்காக முடிவெடுக்க முடியாது. தெலங்கானா, மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடக மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஐதராபாத் விடுதலை தினத்தை கொண்டாட முடிவு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய அரசு சார்பில் நடைபெற்ற இந்த விழாவை, தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் புறக்கணித்தார். அதே சமயம் மாநில அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் அவர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.