சியோபூர்: ஆப்பிரிக்க நாடான நமீபியாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட 8 சிவிங்கிப் புலிகளை மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி சனிக்கிழமை திறந்துவிட்டார். இந்தியாவில்அழிந்துவிட்டதாக கருதப்பட்ட சிவிங்கிப் புலிகள் 70 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இங்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இது பெரும் வரலாற்று நிகழ்வாக கருதப்படுகிறது.
கடந்த 1952-ம் ஆண்டு முதல் இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், இந்தியக் காடுகளில் மீண்டும் அவற்றை அறிமுகம் செய்ய பல்வேறு தொடர் முயற்சிகள் அரசால் மேற்கொள்ளப்பட்டன. இதன்பலனாக 2022 ஜூலை ஆப்பிரிக்க நாடான நமீபியாவுடன் அதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, 5 பெண் சிவிங்கிப் புலிகள், 3 ஆண் சிவிங்கிப் புலிகள் என மொத்தம் 8 சிவிங்கிப் புலிகளை வெள்ளிக்கிழமை இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதில் ஐந்து பெண் சிவிங்கிப் புலிகள் 2 முதல் 5 வயதுடையவை. ஆண் சிவிங்கிப் புலிகள் 4.5 முதல் 5.5 வயது கொண்டவை.
இந்தச் சிவிங்கிப் புலிகள் அனைத்தும் நமீபியா தலைநகரில் இருந்து B747 ரக ஜம்போ ஜெட் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை மாலை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து கிளம்பிய விமானம் வழியில் எங்கும் நிற்காமல் சனிக்கிழமை காலையில் 7.55 மணிக்கு குவாலியரை வந்தடைந்தது. அங்கு குடியேற்ற சுங்க நடைமுறைகள் முடிவைடைந்ததும், அங்கிருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலமாக, குனோ தேசிய பூங்காவிற்கு சிவிங்கிப் புலிகள் கொண்டுவரப்பட்டன.
வனவிலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களில் மறுமலர்ச்சி மற்றும் பன்முகத்தன்மையை உறுதிப்படுத்தும் திட்டத்தின் ஒரு அங்கமாக நமீபியாவிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட இந்த சிவிங்கிப் புலிகளை இந்தியக் காடுகளுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக தனது பிறந்த நாளான சனிக்கிழமை (செப்.17) பிரதமர் மோடி, மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் திறந்துவிட்டார்.
அப்போது பேசிய பிரதமர், “இந்தியாவில் சிவிங்கிப் புலிகளை மறு அறிமுகம் செய்யும் இந்தத் திட்டத்திற்கு உதவியதற்காக நான் நமீபியா அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். துரதிர்ஷ்டவசமாக கடந்த 1952-ல் சிவிங்கிப் புலிகள் இந்தியாவில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு அவற்றைக் கொண்டுவர எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
சிவிங்கிப் புலிகள் அழிந்து 70 ஆண்டுகளுக்கு பின்னர் அவற்றை இந்தியாவில் மறு அறிமுகம் செய்யும் சிவிங்கிப் புலி திட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பிற்கான நமது முக்கிய முயற்சி. இந்தியா இந்த 21-ம் நூற்றாண்டில் உலகிற்கு ஒரு முக்கியமான செய்தியினைத் தெரிவித்துள்ளது/ சூழலியலும் பொருளாதாரமும் ஒன்றுக்கொன்று முரணான துறைகள் இல்லை என்பதே அது.
உலகில் வேகமாக ஓடக்கூடிய இந்த சிவிங்கிப் புலிகளைப் பார்ப்பதற்கு மக்கள் இன்னும் கொஞ்ச காலம் பொறுமையாக காத்திருக்க வேண்டும். இந்த சிவிங்கிப் புலிகள் குனோ தேசிய பூங்காவிற்கு இன்று நமது விருந்தாளிகளாக வந்துள்ளன. விரைவில் அவை இதனைத் தங்களுது வீடாக மாற்றிக்கொள்ள நாம் அவகாசம் தரவேண்டும்” என்று பிரதமர் தெரிவித்தார்.
முன்னதாக இதுகுறித்து மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறுகையில், “பிரதமரின் பிறந்தநாளில் மத்திய பிரதேசத்திற்கு இதைவிட சிறந்த பரிசு ஒன்று இருக்க முடியாது. இந்தியாவில் சிவிங்கிப்புலிகள் அழிந்து விட்ட நிலையில், இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான சாதனை இது. இந்த நடவடிக்கையால் சுற்றுலா வளர்ச்சி அடையும். இந்த நடவடிக்கைகளுக்காக மத்தியப் பிரதேசம் சார்பில் நான் பிரதமர் மோடிக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
இந்தியாவிற்கு சிவிங்கிப்புலிகள் கொண்டுவரப்பட்ட வீடியோக்களையும், படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விமானபோக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, “சிவிங்கிப்புலிகள் தங்களின் புதிய வாழ்விடமான குனோவிற்கு வந்துள்ளன. நமது பெரிய பூனைகளுக்கான சொர்க்கம் இது” என்று பதிவிட்டுள்ளார்.
The cheetahs have arrived in their new home- KUNO – heavenly habitat for our cats! pic.twitter.com/wlEhKBr2EY