வாஷிங்டன்: உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கு இது காலமல்ல என ரஷ்ய அதிபர் புடினிடம், நேரடியாக வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க நாளிதழ்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.
உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்டில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார்.அப்போது மோடி கூறுகையில், இது போருக்கான காலமல்ல. இதை, தொலைபேசி அழைப்பின் போது பல முறை உங்களிடம் வலியுறுத்தி உள்ளேன். ஜனநாயகம், ராஜதந்திரம், பேச்சுவார்த்தை ஆகியன உலகை ஒன்றாக வைத்திருக்கும் எனக்கூறினார்.
அதற்கு பதிலளித்த புடின், உக்ரைனில் நடக்கும் மோதல்கள் குறித்து உங்களின் நிலைப்பாடு எனக்கு தெரியும். இதை விரைவில் நிறுத்த முடிந்த அனைத்தையும் செய்வோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, எதிர்தரப்பில், உக்ரைனின் தலைமை பேச்சுவார்த்தையை கைவிடுவதாக அறிவித்தது. மேலும், தனது நோக்கத்தை ராணுவ பலம் மூலம் நிறைவேற்றி கொள்வதாக கூறியதாக கூறினார்.
போர் குறித்து புடினை வலியுறுத்தியதற்காக மோடிக்கு அமெரிக்க நாளிதழ்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு புடினை கண்டித்த பிரதமர் மோடி என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ள தி வாஷிங்டன் போஸ்ட், மோடியின் பேச்சையும், புடினின் பதிலையும் வெளியிட்டுள்ளது. மேலும், இதன் மூலம் புடின் அனைத்து தரப்பிலும் இருந்து நெருக்கடியை சந்தித்து வருவதாக தனது செய்தியில் கூறியுள்ளது. அந்த பத்திரிகையின் இணையதளத்திலும் இது வெளியிடப்பட்டுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் நாளிதழில், ‘ இது போருக்கான சகாப்தம் இல்லை என புடினிடம் இந்திய தலைவர் கூறியுள்ளார்’ என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில் நட்பு அடிப்படையில் நடந்த இந்த சந்திப்பில், இரு தலைவர்களும் தங்களது நீண்ட வரலாற்றை பகிர்ந்து கொண்டுள்ளனர். மோடியின் கருத்துக்கு முன்னர், புடின், தாக்குதல் குறித்து இந்தியாவின் கவலையை புரிந்து கொள்வதாக பதிலளித்தார். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை கருத்து
வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கிர்பி கூறுகையில், உக்ரைன் குறித்து இந்திய, சீன தலைவர்கள் கூறுவதை கேட்பதற்கு புடின் தயாராக இல்லை. புடின் சர்வதேச சமூகத்தில் இருந்து தன்னை தனிமைபடுத்தி கொண்டுள்ளார். உக்ரைனில், ரஷ்யா செய்யும் செயலை பார்த்து, அவர்களுடன் வழக்கம் போல் வணிகத்தில் ஈடுபடுவது முடியாது . இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement