ஹசாரிபாஹ்: முறையாக தவணை கட்டாததால் விவசாயியின் டிராக்டரை பறிமுதல் செய்ய வந்த நிதி நிறுவன அதிகாரிகள், அவரது கர்ப்பிணி மகளை அதே டிராக்டரை ஏற்றி கொலை செய்தனர்.
இந்தியா ஜனநாயக நாடு என நாம் மார்த்தட்டி கொண்டிருக்கும் வேளையில், ஒரு சர்வாதிகார நாட்டில் கூட நடக்க முடியாத கொடுமை இங்கு அரங்கேறி இருக்கிறது.
நாட்டுக்கே உணவளிக்கும் விவசாயிகளுக்கு இங்கு என்ன மரியாதை தரப்படுகிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு மோசமான எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.
கடன் பெற்று டிராக்டர் வாங்கிய விவசாயி
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மித்திலேஷ் மேத்தா (56). விவசாயியான இவர், கடந்த ஆண்டு தனது நிலத்தை உழுவதற்காக டிராக்டர் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்காக பிரபல தனியார் நிதி நிறுவனத்திடம் அவர் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார். கொரோனா பாதிப்பு, விளைச்சல் குறைவு போன்ற காரணங்கள் இருந்தாலும், தான் வாங்கிய கடனுக்கு மித்திலேஷ் மேத்தா முறையாக தவணை செலுத்தி வந்திருக்கிறார்.
கனமழையால் நஷ்டம்
இந்நிலையில், ஜார்க்கண்டில் கடந்த சில மாதங்களாக பருவம் தவறி கனமழை பெய்து வந்தது. இதனால் அங்குள்ள விவசாயிகள் சாகுபடி செய்திருந்த கோதுமை உள்ளிட்ட பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. இவர்களின் விவசாயி மித்திலேஷ் மேத்தாவும் ஒருவர். இந்த நஷ்டத்தின் காரணமாக மித்திலேஷ் மேத்தாவால் கடந்த 5 மாதங்களாக கடன் தவணை கட்ட முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
நிதி நிறுவனத்தினர் மிரட்டல்
இதில் அந்த தவணைகளுக்கு வட்டி மேல் வட்டியும் சேர்ந்து போனது. இதனால் சம்பந்ததப்பட் நிதி நிறுவன அதிகாரிகள் சமீபகாலமாக அவரை தொலைபேசியிலும், நேரிலும் வந்து திட்டுவதும் செல்வதுமாக இருந்துள்ளனர். மேலும், இன்னும் சில தினங்களில் மொத்த தவணையையும் வட்டியையும் செலுத்தாவிட்டால் டிராக்டரை பறிமுதல் செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் மித்திலேஷ் மேத்தா தனது மனைவியின் நகைகளை விற்றும், உறவினர்களிடம் கடன் கேட்டும் வந்துள்ளார். இருந்தபோதிலும், மூன்று மாத தவணைகளுக்கும், வட்டிக்குமான பணம் சேரவில்லை எனத் தெரிகிறது.
வீட்டுக்கு வந்த குண்டர்கள்
இந்நிலையில், நேற்று மதியம் அந்த தனியார் நிறுவன அதிகாரிகள், சில குண்டர்களை விவசாயி மித்திலேஷ் மேத்தாவின் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது அந்த குண்டர்கள் விவசாயி மித்திலேஷ் மேத்தாவை ஆபாசமாக பேசியுள்ளனர். அந்த சமயத்தில், அங்கிருந்த 6 மாத கர்ப்பிணியான அவரது மகள் பூஜா ராணி (27), “எனது தந்தையை ஆபாசமாக பேசாதீர்கள், உங்களிடம் வாங்கிய கடனை இன்னும் இரு தினங்களில் கட்டிவிடுவோம்” எனக் கூறியுள்ளார்.
நிதி நிறுவனத்தினர் அராஜகம்
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனில் குமாரின் டிராக்டரை எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது பூஜா ராணி, டிராக்டர் முன்னால் வந்து நின்று, “இன்று மாலைக்குள் பணம் தருகிறோம். டிராக்டரை எடுத்துச் செல்லாதீர்கள்” எனத் தெரிவித்தார். ஆனால் அதற்கு சம்மதிக்காக நிதி நிறுவனத்தினர், ‘இப்போதே பணம் தர வேண்டும்; இல்லையென்றால் டிராக்டரை எடுத்து செல்வோம்’ எனக் கூறியிருக்கின்றனர்.
டிராக்டரை ஏற்றி கொலை
மேலும், பூஜா ராணியை டிராக்டர் முன்னால் இருந்து நகர்ந்து செல்லுமாறும் கூறியுள்ளனர். ஆனால் பூஜா ராணி அவர்களுக்கு வழிவிடாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அவர் மீது டிராக்டரை ஏற்றினர். இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பூஜா ராணி உயிரிழந்தார். இதை பார்த்து பயந்து போன நிதி நிறுவனத்தினர் அங்கிருந்து தப்பியோடினர். விஷயம் கேள்விப்பட்டு அங்கு வந்த கிராம மக்கள், பூஜா ராணியை உடலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு கொண்டு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜார்க்கண்டில் பதற்றம்
இதையடுத்து, ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பூஜா ராணியை கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். எனினும், கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹசாரிபாங் மாவட்ட எஸ்.பி. மனோஜ் ரத்தன் கூறுகையில், “மித்திலேஷ் மேத்தாவின் டிராக்டரை பறிமுதல் செய்யப் போகிறோம் என நிதி நிறுவனத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இது மிக துரதிருஷ்டசமான சம்பவம். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்றார்.