லண்டன்: “கிறிஸ்துவம் மட்டுமல்ல, அனைத்து மதங்களையும் பாதுகாப்பேன்” என்று இங்கிலாந்து மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
70 ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டனை ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து அவரது மகனான இளவரசர் சார்லஸ், மன்னராக பதவியேற்றார். ராணியின் இறுதிச் சடங்கு வரும் திங்கள்கிழமை நடக்கவுள்ள சூழலில், மன்னர் சார்லஸ் முக்கிய நிகழ்வுகளில் பங்கெடுத்து வருகிறார்.
அந்த வகையில் வெள்ளிக்கிழமை பக்கிங்காம் அரண்மனையில் மதத் தலைவர்களை இங்கிலாந்து மன்னர் சார்லஸ் சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “கிறிஸ்தவம் மட்டுமல்ல, எல்லா மதங்களையும் பாதுகாப்பேன். அனைத்து மத நம்பிக்கைகளையும் பாதுகாப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன். நான் எப்பொழுதும் பிரிட்டனை சமூகங்களின் சமூகமாகவே நினைத்திருக்கிறேன்.
மதங்கள், கலாசாரங்கள், மரபுகள் மற்றும் நம்பிக்கைகளைப் பாதுகாப்பதன் மூலம் நமது நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பது நமது கடமையாகும். நமது நாட்டின் பன்முகத்தன்மை நம் நாட்டின் சட்டங்களில் மட்டும் பொறிக்கப்படவில்லை, எனது சொந்த நம்பிக்கையிலும் உள்ளது. அரசனாக, அனைத்து சமூகங்களுக்காகவும், அனைத்து நம்பிக்கைகளையும் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று சார்லஸ் பேசினார் பேசினார்.