திருப்போரூர் ஒன்றிய
செயலாளர் அருண்குமார் உள்ளிட்ட 2000 பேர் பாமகவில் இருந்து விலகி அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் திமுகவில் அண்மையில் இணைந்தனர். இதேபோல், வேறு சில நிர்வாகிகளும்
பக்கம் சாய்ந்து வருகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ள திமுக, கட்சியை பலப்படுத்தும் வேலைகளிலும் இறங்கியுள்ளது. குறிப்பாக, தாங்கள் வீக்காக இருக்கும் இடங்களில் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து பலமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், அதிருப்தியில் உள்ள மாற்றுக்கட்சியினர் பலரையும் தங்கள் பக்கம் இழுத்து வருகிறது திமுக. இதற்கான அசைன்மெண்ட்டுகள் அமைச்சர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் பெயர் போனவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. கோவைக்கு பொறுப்பாளராக உள்ள அவர், பல்க் பல்க்காக ஆட்களை தூக்கி வருகிறார். அதிமுகவை சேர்ந்தவர்களுக்கே பெரும்பாலும் வலை விரிக்கப்படும் பட்சத்தில் பாமகவை சேர்ந்த 2000 பேர் திமுகவில் இணைந்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
இதுகுறித்து அறிவாலய வட்டாரங்களில் விசாரித்தபோது, பாமக தலைவராக அன்புமணி பொறுப்பேற்றது முதலே, அவர்களது கட்சிக்குள் சலசலப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ராமதாஸால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவர் அலட்சியப்படுத்துவதால் பலரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் எங்களோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனை அறிந்த தலைமை அவர்களை ஒருங்கிணைக்கும் பணிகளை அவர்கள் சார்ந்திருக்கும் சமூகத்தை சார்ந்த அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளிடம் கொடுத்துள்ளது. அதிருப்தியாளர்களின் பட்டியலை மாவட்ட வாரியாக தயார் செய்திருக்கும் அவர்கள், சில மாவட்ட நிர்வாகிகளிடம் முதற்கட்ட பேச்சுவார்த்தையையும் நடத்தியுள்ளார்கள். அதன் முன்னோட்டமே இந்த 2000 பேர் இணைப்பு சம்பவம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாமகவினர் பெருமளவில் திமுகவில் இணைவர்.” என்கின்றனர்.
இதுகுறித்து அரசியல் விமர்சகர்களிடம் பேசியபோது, “வட மாவட்டங்களில் திமுகவுக்கு பெரிதாக வாக்கு வங்கி இல்லை. அந்த மாவட்டங்களில் வன்னியர் சமுதாய மக்களின் ஆதரவுடன் பாமகவுக்கு பெரியளவில் வாக்கு வங்கி உள்ளது. எனவே, இப்போது ஆட்சியில் இருக்கும் திமுக அதனை பயன்படுத்துக் கொண்டு தனது கட்சியை வளர்க்கும் வேலைகளில் ஈடுபடுகிறது. ஆட்சி அதிகாரம் இருப்பதால், மற்ற கட்சியினர் போலவே திமுகவை நோக்கி பாமகவினர் படையெடுக்கின்றனர். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.” என்றனர்.
பாமக மூத்த நிர்வாகிகள் கூறுகையில், தலைவராக அன்புமணியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. கட்சியில் உழைப்பவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அவரை ஒடுக்குவதற்கான சூழ்ச்சிகளும் நடக்கின்றன. ஆனால், அதற்கெல்லாம் அவர் அச்சம் கொள்ள மாட்டார். உண்மையான பாமக தொண்டன் வேறு கட்சிக்கு போக மாட்டான். வியாபார நோக்கத்தில் இருப்பவர்கள் தான் ஆதாயம் தேடி காற்றடிக்கும் பக்கம் சாய்வார்கள் என்றனர்.