புதுடெல்லி: “குனோ தேசிய பூங்காவில் சிவிங்கிப் புலிகளைத் திறந்துவிட்ட நிகழ்வு தேசிய பிரச்சினைகள், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்து மக்களைத் திசைதிருப்ப பிரதமர் மோடி நடத்திய தமாஷ்” என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியாவில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிவிங்கிப் புலிகளை இந்தியாவில் மறு அறிமுகம் செய்யும் விதமாக, நமீபியாவிருந்து வரவழைக்கப்பட்ட 8 சிவிங்கிப் புலிகளை பிரதமர் மோடி சனிக்கிழமை மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் திறந்துவிட்டார். 70 வருடங்களுக்கு பின்னர் இந்தியா காடுகளுக்கு மறு அறிமுகம் செய்யப்பட்ட இந்த நிகழ்வு பாஜகவின் திசை திருப்பும் முயற்சி என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
தனது 72-வது பிறந்த நாளான சனிக்கிழமை சிவிங்கிப் புலிகளை குனோ தேசிய பூங்காவில் திறந்து விட்டு பேசிய பிரதமர், “1952-ம் ஆண்டு சிவிங்கிப் புலிகள் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் அவற்றை திருப்பக் கொண்டுவருவதற்காக எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்பபடவில்லை” என்றார். மோடியின் இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் எம்பியும், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவருமான ஜெய்ராம் ரமேஷ் ட்விடரில் பதிவிட்டுள்ளார். அதில், “கடந்த ஆட்சியின் தொடர் நிகழ்வுகளை பிரதமர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அதற்கு சமீபத்திய உதாரணம், சிவிங்கிப் புலி திட்டத்திற்காக கடந்த 2010, ஏப்.25 ம் தேதி கேப்டவுணுக்கு சென்று வந்தது. இன்று பிரதமரால் குனோவில் நடத்தப்பட்ட தமாஷ் நிகழ்வு தேசிய பிரச்சினைகள், பாரத் ஜோடா யாத்திரையில் இருந்து கவனத்தை திசைத்திருப்பும் முயற்சியே.
கடந்த 2009 -11களில் முதன்முதலாக பான்னா, சரிஸ்காவிற்கு புலிகள் இடமாற்றப்படும்போது இதுபெரும் அழிவை ஏற்படுத்தும் ஏற்படுத்தும் என்று பல கருத்துக்கள் சொல்லப்பட்டன. அவைத் தவறு என்று நிரூபிக்கப்பட்டது. அப்படியான கணிப்புகள் இந்தச் சிவிங்கிப்புலி திட்டத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. முதல் தர நிபுணர்கள் இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இந்தத் திட்டம் சிறக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் ஊடகப் பிரிவுக்கான தலைவர் பவன் கெரா ஜெய்ராம் ரமேஷின் ட்வீட்டை டேக் செய்து, “எங்களுடைய புலி (ராகுல் காந்தி) பாரத் ஜோடோ யாத்திரைக்குச் சென்றுள்ளதால், அவர்கள் வெளிநாட்டிலிருந்து சிவிங்கிப் புலியை இறக்குமதி செய்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை காங்கிரஸ் ஆட்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் கடந்த 2010-ம் ஆண்டு சிவிங்கிப் புலி ஒன்றுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “சிவிங்கிப்புலி திட்டம் 2008 – 09ம் ஆண்டு முன்மொழியப்பட்டு, மன்மோகன் சிங் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அந்தத் திட்டதிற்கு தடை விதித்தது. பின்பு 2020-ம் ஆண்டு மீண்டும் அனுமதி வழங்கியது” என்று தெரிவித்திருந்தார்.
PM hardly ever acknowledges continuity in governance. Cheetah project going back to my visit to Capetown on 25.04.2010 is the latest example. The tamasha orchestrated by PM today is unwarranted and is yet another diversion from pressing national issues and #BharatJodoYatra 1/2 pic.twitter.com/SiZQhQOu0N