தனக்கு பிடித்த உனவை சமைத்து தராததால் தாயுடன் சண்டையிட்ட 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
உத்தராகண்டிலுள்ள டேராடூன் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ராய்ப்பூர் நகரின் தாதா லோகண்ட் பகுதியில் குடும்பத்தாருடன் வசித்துவரும் 16 வயது சிறுமியை அவருடைய தாயார் வியாழக்கிழமை இரவு உணவு சாப்பிட அழைத்திருக்கிறார். ஆனால் சிறுமி தனக்கு அந்த உணவு பிடிக்கவில்லை என தனது தாயுடன் சண்டையிட்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து உதவி ஆய்வாளர் பாவ்னா கன்னைர் கூறுகையில், ‘’வியாழக்கிழமை இரவு தனது தாய் சமைத்த உணவு பிடிக்கவில்லை என்றும், தனக்கு பிடித்த உணவை ஏன் சமைக்கவில்லை என்று சிறுமி சண்டையிட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சிறுமி சாப்பிடாமலேயே தனது அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. அதனைக் குடும்பத்தாரும் அக்கம்பக்கத்தினரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் சில மணிநேரங்கள் ஆகியும் சிறுமி கதவைத் திறக்காததால் பெற்றோர் அறைக்கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரம் தட்டியும் சிறுமி கதவைத் திறக்காமல் போகவே பயந்துபோன குடும்பத்தார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்திருக்கின்றனர். அப்போது சிறுமி அறையில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். அவரை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்’’ என்று கூறினார். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM