திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் மக்கள் நலனுக்காக எதையுமே செய்யவில்லை என்றும், பால், மின்சாரம், சிமெண்ட், செங்கல், மணல், என பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டு மக்கள் அவதியில் ஆழ்ந்துள்ளார்கள் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆளும் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.
‘திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்களில் விலையேற்றம் முன்னிலையில் இருக்கிறது. மக்களின் மேல் அக்கறை கொண்டவர்களை போல நாடகமாடிய இந்த திறனற்ற திமுக அரசின் சாயம் வெளுக்க தொடங்கிவிட்டது. சென்ற வாரம் மின் கட்டண உயர்வின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன் ஆவின் பொருட்களின் விலையை ஏற்றியுள்ளார்கள். திமுக 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் ஏமாற்று வாக்குறுதிகள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மக்களின் மீது சுமத்தப்படும் வரிகள் மற்றும் விலையேற்ற நடவடிக்கைகள் இருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக கட்டுமான பொருட்களின் விலையை ஏற்றினர். சிமெண்ட், செங்கல், மணல், கம்பிகள் மற்றும் இதர கட்டுமான பொருட்களின் விலையும் ஒரேயடியாக உயர்த்தப்பட்டது. 410 ரூபாயாக இருந்த சிமெண்ட் 500 ரூபாயாகவும், 60 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கம்பியின் விலை 72 ரூபாயாகவும், 3,600 ரூபாயாக இருந்த எம் சாண்ட் 4,000 ஆயிரமாகவும், 4,600 க்கு விற்கப்பட்ட வி சாண்ட் 5,100 ஆகவும், 23000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லோடு செங்கல் 28000 ரூபாயாகவும் , 8,500 க்கு விற்கப்பட்ட 3 யூனிட் ஜல்லி 9,500 ரூபாயாகவும் வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தப்பட்டது.
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பெட்ரோல் விலை 5 ரூபாய் மற்றும் டீசல் விலை 4 ரூபாய் குறைப்போம் என்பதையும் இந்த திறனற்ற திமுக அரசு நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் மின்சார கட்டணம் போன்றவற்றை உயர்த்தி உள்ளது.