தென்காசியில் ஊர்க்கட்டுப்பாடு விதித்து தீண்டாமை பின்பற்றுப்படுவதாக வீடியோ வெளியானதைத் தொடர்ந்து ஊர் நாட்டாமை உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக பள்ளி மாணவர்களுக்கு பொருட்கள் கொடுக்க மாட்டோம் என வன்கொடுமையை தூண்டும் விதத்தில் வீடியோ பதிவிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் இரு தரப்பினர் (கோனார் மற்றும் பட்டியல் சாதியினர்) சேர்ந்தவர்கள் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோனார் சாதியினர் பட்டியல் சாதியினரிடம் வழக்குகளை திரும்பப் பெறக் கோரி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பட்டியல் சாதியினர் இதற்கு உடன்படவில்லை. இதையடுத்து, பட்டியல் சாதியினருக்கு தங்கள் கடைகளில் எந்த பொருளும் கொடுக்கக் கூடாது என கோனார் சமூகத்தினர் தீர்மானம் செய்ததாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் கோனார் சமூகத்தை சேர்ந்த ஊர் தலைவர் மகேஷ்வரன் என்பவர் தமது கடைக்கு தின்பண்டம் வாங்க வந்த பட்டியலின மாணவர்களுக்கு, பொருட்கள் தர மறுத்து, அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதையடுத்து மகேஷ்வரன் மற்றும் அவரது நண்பர் ராமச்சந்திர மூர்த்தி ஆகிய இருவர் மீதும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த ‘கரிவலம்வந்தநல்லூர்’ காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.
மேலும் பாஞ்சாகுளம் கிராமத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.
- திருவள்ளூர் மாவட்டத்தில் தீண்டாமை சுவர்களா? – பிபிசி தமிழ் கள ஆய்வு
- “பேசிய கருத்துக்காக ஒருவரை தண்டிக்க முடியுமா?”: நீதிபதி ஹரி பரந்தாமன் பேட்டி
- தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகளுக்கு தனிச்சட்டம் அவசியமா? – அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்கள்
மாவட்ட நிர்வாகம் கூறுவது என்ன?
இப்பிரச்சினை குறித்து பிபிசி தமிழ் தென்காசி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, “கடந்த 2020ஆம் ஆண்டு பாஞ்சாகுளம் கிராமத்தில் இரு சமூகத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது,” என்று பெயர் வெளியிட விரும்பாத ஓர் அதிகாரி தெரிவித்தார்.
“இந்நிலையில் பாஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள கோனார் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அவரால் ராணுவத்தில் சேர முடியவில்லை.
எனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு தரப்பு மக்களும் கூடி இந்த வழக்கு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வழக்கை வாபஸ் பெற்று சமரசம் செய்து கொள்ளலாம் என கேட்டுள்ளனர். ஆனால் மற்றொரு சமூகமான பட்டியலின மக்கள் அதற்கு உடன்படாததால் கோனார் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி பட்டியலின மக்களுக்கு கடைகளில் பொருட்கள் எதுவும் விற்பனை செய்ய வேண்டாம் என தீர்மானித்துள்ளனர்” என்றும் அவர் கூறினார்.
வைரலான வீடியோ
மகேஷ்வரன் வெளியிட்ட வீடியோ விவகாரம் குறித்து தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்த உடனே வருவாய் துறை அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட கடை மூடி சீல் வைக்கப்பட்டது. மேலும், அந்த வீடியோவை பதிவு செய்து வெளியிட்ட ஊர் நாட்டாமை மற்றும் அவரது நண்பர் மீது கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் தீண்டாமை அவலம் ஏற்படும் வண்ணம் வீடியோ, பரவியதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார் அந்த அதிகாரி.
காவல்துறை என்ன சொல்கிறது?
இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண ராஜ் பிபிசி தமிழிடம் பேசுகையில், பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு நடக்கும் தீண்டாமை அவலம் குறித்து போலீசாருக்கு புகார் மனு கிடைத்த உடன் வழக்கு பதிவு செய்து உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்றார்.
சமூக வலைதளங்களில் தீண்டாமை சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு செய்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிரிவுகள் சேர்க்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.
தென்காசி மாவட்டத்தில் சாதிப் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்க, மாதமொருமுறை பல ஊர்களில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் கிருஷ்ண ராஜ் தெரிவித்தார்.
https://www.youtube.com/watch?v=WxeE1A7ZpsA
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்