சென்னை: இந்து மதம் குறித்து ஆ.ராசாவை பேசவிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேடிக்கைப் பார்க்கிறார் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.
சமீபத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா இந்துமதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது இந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்து வருகிறது. திமுக அரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், அமமுக தலைவர் டிடிவி தினகரன், ராசாவை பேசவிட்டு, ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
‘இந்துமதத்தைப் பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் திரு.ஆ.ராசா மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.
மத உணர்வுகளைத் தூண்டும் இத்தகைய பேச்சுகளை அனுமதிப்பது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்.
பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நாவடக்கம் தேவை. தி.மு.க அரசின் தோல்விகளைத் திசை திருப்புவதற்காகவே ராசா போன்றவர்களை பேசவிட்டு, திரு.ஸ்டாலின் வேடிக்கைப் பார்க்கிறாரோ? என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.’
என பதிவிட்டுள்ளார்.