அரசு செயல்படுவதற்கு நானே ஊக்கி – கமல் ஹாசன் பெருமிதம்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசன் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த 15ஆம் தேதி கோவை சென்றார். அதனையடுத்து அவர் நேற்று தனியார் திரையரங்கில் நடந்த விக்ரம் படத்தின் 100ஆவட்ஜி நாள் வெற்றி விழாவில் பங்கேற்று பேசினார். அதனைத் தொடர்ந்து இன்று காலை கோவை ராஜவீதி பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற கமல், அங்கு படிக்கும் மாணவிகளுடன்  கலந்துரையாடினார். பின்னர் அவர்களுடன் புகைப்படமும் எடுத்து கொண்டார். அப்போது அவர் பேசிய அவர், “ நான் படித்த பள்ளியில் நிறைய வசதி இருந்தும் என்னால் பள்ளி படிப்பை தொடர முடியவில்லை. ஆனால் நீங்கள் வசதிகளின்றி பயில்வது மகிழ்ச்சியளிக்கிறது. இப்பள்ளியில் கழிவறை கட்டுவதற்கு நாங்கள் முயற்சி மேற்கொண்டு வந்தோம். ஆனால் அதற்குள்ளாக அரசே முன்வந்து கழிவறை கட்ட உள்ளது. 

அரசு செயல்படுவதற்கு நான் ஊக்கியாக இருந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்தப் பள்ளியில் கட்டி கொடுக்க இருந்த கழிவறையை கெம்பட்டி காலனி பகுதியில் கட்டி கொடுக்க உள்ளோம். எனக்கு இங்கு அனுமதி கொடுத்த அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதனை நான் தமிழனின் கடமையாய் நினைத்து செய்கிறேன்” என்றார்.

அந்த நிகழ்வை முடித்துக்கொண்டு கோவை கெம்பட்டி காலனி பகுதிக்கு சென்ற கமல் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகு அவர்கள் மத்தியில் பேசிய கமல், “இந்த பகுதியில் 800க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆனால் அவர்களுக்கு ஒரே ஒரு கழிவறை மட்டுமே இருந்து வருகிறது. அவர்களுக்கு நாங்கள் எங்கள் சொந்த செலவில் ஒரு கழிவறையை கட்டித்தர உள்ளோம். நான் இதை எனது தேர்தல் வாக்குறுதியில் கூறவில்லை.

ஆனாலும் இதனை நாங்கள் செய்து தருகிறோம். அதனை நீங்கள் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். அதை பார்வையிடுவதற்காக நான் மீண்டும் வருவேன். அப்போது கழிவறை சுத்தம் இல்லை என்றால் நானே இறங்கி சுத்தம் செய்வேன். 

 

இந்தப் பகுதியில் போதைப் பொருள் புழக்கம் அதிக அளவில் இருப்பதாக தெரிகிறது. எனவே இளைஞர்கள் அதனை கைவிட்டு நேர்வழியில் செல்ல வேண்டும். இதனை தாய்மார்கள், குடும்பத்தினர் கண்காணிக்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் குடிநீர் பிரச்னை உள்ளதாக மக்கள் தெரிவித்தனர். அது குறித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைப்போம்” என்று பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.