லண்டன்: ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி நிகழ்வின் பாதுகாப்பிற்காக, இந்திய மதிப்பில் சுமார் 59 கோடி ரூபாய் தொகை செலவிடப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 8-ம் தேதி ஸ்காட்லாந்தின் பால்மோரல் அரண்மனையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) உயிரிழந்தார். தலைநகர் லண்டனில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அரங்கில் ராணியின்உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. ராணியின் இறுதி நிகழ்வு வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது. அதற்கான தீவிரப் பணிகளில் பிரிட்டன் அரசக் குடும்பம் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில். பிரிட்டனின் வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில், ராணியின் இறுதி நிகழ்வுக்காக சுமார் 59 கோடி ரூபாய் தொகை செலவிட இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனின் வரலாற்றில், பாதுகாப்புக்காக இவ்வளவு தொகை செலவிடப்பட இருப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னர் சார்லஸ் – டயானாவின் மூத்த மகனான வில்லியமின் திருமணத்தின்போது அதிகப்படியான தொகை பாதுகாப்பாக செலவிடப்பட்டது.
உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் ராணியின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதால் பிரிட்டிஷின் எம்ஐ5 & எம்ஐ6 புலனாய்வு துறையினர், லண்டன் போலீஸார், மற்றும் ரகசிய அதிகாரிகளும் இணைந்து பாதுகாப்பில் ஈடுபட்ட உள்ளனர்.
பாதுகாப்பு குறித்து பிரிட்டன் அரச குடும்ப அதிகாரி ஒருவர் கூறும்போது, “பிரிட்டன் மேற்கொள்ளும் மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கை இது. இளவரசர் வில்லியமின் திருமணத்திற்கு மிகப் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், இது மிகப் பெரியது. அதனுடன் இதனை ஒப்பிட முடியாது” என்றார்.