நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்ததாக செல்வராகவனின் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தை வருகிற 29-ம் தேதி வெளியிட படக்குழு முயன்று வருகிறது.
மேலும் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகும் ‘வாத்தி’ திரைப்படத்தினை பிரபல தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மிக நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்த தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. ‘ராக்கி’, சாணிக்காயிதம்’ ஆகியப் படங்களை இயக்கி அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.
இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப்படம் 1930-கள் மற்றும் 40-களில் மெட்ராஸ் பிரசிடென்சியை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. ‘கே.ஜி.எஃப்.’ படம் போன்று எடுக்கவுள்ளதாகவும் இயக்குநர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்காக நடிகர் தனுஷ் புதிய லுக்கில் வலம் வருகிறார். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகரும், லோகேஷ் கனகராஜின் ‘மாநகரம்’ படத்தின் கதாநாயகனுமான சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளதாக கடந்த இரண்டு நாட்களாக தகவல்கள் வெளியானநிலையில், இன்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக சந்தீப் கிஷன் ட்வீட் செய்துள்ளார்.
Pleased to be a Part of the Ambitious
#CaptainMiller
Honoured to work alongside a man of Mammoth talent & A constant source of Inspiration @dhanushkraja anna
Thank the Genius @ArunMatheswaran & Dear @SathyaJyothi for bringing this crazy part to me @gvprakash
Jai Hind pic.twitter.com/fab8am51ez— Sundeep Kishan (@sundeepkishan) September 17, 2022