கடலூர்: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, கடலூர் அருகே கோண்டூரில் அனுமதியின்றி கொடியேற்ற வந்த பாஜகவினரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் கோண்டூர் பஸ் நிறுத்தம் அருகே, பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜக மகளிர் அணி சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பாஜக மகளிர் அணி நிர்வாகி ஜெனித் மேகநாதன் தலைமையில் இன்று காலை கொடி ஏற்றுவதற்காக கோண்டூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தனர். அப்போது அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீஸ் அனுமதியின்றி இந்த பகுதியில் பாஜக கொடி ஏற்ற கூடாது என்று அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உண்டானது.
இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி இல்லாமல் இங்கு பாஜகவினர் கொடியேற்றக் கூடாது என்று கூறினர். மேலும் அதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். இதையடுத்து போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீஸ் அனுமதி இல்லாமல் அங்கு கொடியேற்றக் கூடாது என்று கூறி பாஜக கொடி கம்பத்தை அகற்றினர். இதன்பிறகு இரு தரப்பினரும் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.