திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக தெருநாய் கடித்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். பலபேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகள் சாலையில் நடந்து செல்லும் போது தெருநாய் கடித்து குதறும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி வருகிறது. தெருநாய் விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும், நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது. இந்நிலையில் தெரு நாய்களிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் குழந்தைகளின் தந்தை ஒருவர், கையில் லைசன்ஸ் உள்ள ஏர் கன் துப்பாக்கியுடன் முன்னே நடந்து செல்ல அவருக்கு பின் குழந்தைகள் நடந்து செல்கின்றன.
இந்த காட்சிகளை அவரே மொபைல் போனில் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் தெருநாய்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வலியுறுத்தி மரத்தின் மீது சமூக ஆர்வலர் ஒருவர் சங்கிலியால் தன்னை தானே கட்டிக்கொண்டு நூதன போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார். தெரு நாய்கள் தொல்லை, கேரளாவில் உள்ள சிறுவர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பிள்ளைகளை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புக்கு சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.