சென்னை: 2-வது விமான நிலையம் அமைய உள்ள பரந்தூருக்கு சென்னை மெட்ரோ ரயில் அமைக்க சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்யப்படவுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், 2-வது கட்ட மெட்ரோ பணிகள் ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், 4-வது வழித்தடம் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ நீளத்திற்கு தி.நகர், வடபழனி, போரூர் வழியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தத் திட்டத்தின் நீட்டிப்பாக பரந்தூர் வரை மெட்ரோ ரயில் அமைக்க சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்யப்படவுள்ளது.
இதன்படி, இந்தத் திட்டம் பூந்தமல்லி, இருங்காட்டுகோட்டை, திருப்பெரும்புதூர், சுங்குவார் சத்திரம் வழியாக பரந்தூர் வரை 50 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்படவுள்ளது. இதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.