கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவி மர்ம மரணம் அடைந்த கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி இண்டெர்னேசனல் பள்ளியை மறுசீரமைப்பு செய்திட மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி இண்டெர்நேஷனல் என்ற தனியார் பள்ளியில் கடந்த மாதம் 13ம் தேதி கடலூரை சேர்ந்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
மாணவி மரணத்துக்கு நியாயம் கேட்டு மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
வன்முறை
பெரும் போராட்டமாக இது உருவெடுத்த நிலையில் ஒரு கும்பல் பள்ளியின் வாகனங்களுக்கும், பள்ளி கட்டிடத்துக்கும் தீ வைத்தது. இதனால் பள்ளி அமைந்துள்ள கனியாமூர் பகுதியே கலவரமயமானது. இந்த வன்முறை தொடர்பாக 300 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தது. மாணவி மரண வழக்கு தமிழ்நாடு அரசால் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
5 பேர் கைது
வன்முறைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று உயிரிழந்த மாணவியின் தாயார் தெரிவித்த நிலையில், ஒரு கும்பல் திட்டமிட்டு உள்ளே புகுந்து பள்ளியில் தாக்குதல் நடத்தியதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். மாணவி மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும் செயலாளருமான சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜாமீன் மனு
5 பேரும் நீதிமன்ற காவலில் உள்ள நிலையில் அவர்கள் ஜாமீன் கோரி விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு கடந்த 28 ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
நீதிபதி கருத்து
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், மாணவி கொல்லப்படவோ, பாலியல் வன்கொடுமை செய்யப்படவோ இல்லை என ஜிப்மர் மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. மாணவி பாலியல் வன்கொடுமை அல்லது கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற பெற்றோரின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை.” என்று கூறி பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், 2 ஆசிரியர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தவிட்டார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு
இந்த நிலையில் மாணவி மரணத்தை தொடர்ந்து கனியாமூர் சக்தி பள்ளியில் வெடித்த கலவரம் காரணமாக சேதமடைந்த கட்டிடங்களை மறுசீரமைப்பு செய்திட அனுமதி கோரப்பட்டு இருந்தது. இதனை அடுத்து மாவட்ட நிர்வாகத்தில் நியமனம் செய்யப்படும் அலுவலர் மற்றும் காவல்துறை கண்காணிப்பில் கட்டிடங்களை மறுசீரமைப்பு செய்திட மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் அனுமதி வழங்கி இருக்கிறார்.