இயக்குநரும், நடிகருமான சசிகுமாரின் நடிப்பில் தயாராகியுள்ள ‘நான் மிருகமாய் மாற’ படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘கழுகு’, ‘சவாலே சமாளி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், இயக்குநர் சசிகுமார் ‘காமன் மேன்’ என்ற படத்தில் நடித்து வந்தார். செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் டீசர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ஏற்னவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தில் சசிகுமார், திரைப்பட சவுண்ட் இன்ஜினீயராக நடித்துள்ளார். கன்னட திரையுலக நடிகை ஹரிப்பிரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் ரத்தம் உறைய வைக்கும் கொலை குற்றவாளியாகவும், சைக்கோ வில்லனாகவும் நடிகர் விக்ராந்த் நடித்துள்ளார். இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானப்போது, ‘காமன் மேன்’ என்ற தலைப்பின் உரிமை எங்களிடம் உள்ளது என்று ஏ.ஜி.ஆர் ரைட் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் முறையீடு செய்தது.
இயக்குநர் சுசீந்திரனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய விஜய் ஆனந்த் சார்பில், கடந்த 2018-ம் ஆண்டே ‘காமன் மேன்’ என்கிற தலைப்பு தென்னிந்திய திரைப்பட சேம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த உரிமை தொடர்பாக அனைத்து ஆதார ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாக ஏ.ஜி.ஆர் ரைட் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. சசிகுமார் படத்தின் ‘காமன் மேன்’ என்ற தலைப்பை, சென்சார் போர்டு ஏ.ஜி.ஆர். ரைட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு முறையாக கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இதனால் சசிகுமாரின் ‘காமன் மேன்’ படத்தின் தலைப்புக்கு சிக்கல் எழுந்ததாகக் கூறப்பட்டநிலையில், டைட்டில் மாற்றப்பட்டு அண்மையில் அறிவிப்பு வெளியானது. அதன்படி, ‘காமன் மேன்’ என்ற டைட்டிலிலிருந்து ‘நான் மிருகமாய் மாற’ என்று டைட்டில் வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் வருகிற அக்டோபர் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனை சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
#CommonMan is now #NaanMirugaMaaiMaara
October release https://t.co/rj4ECsWnGy@Sathyasivadir @GhibranOfficial @HariPrriya6 @vikranth_offl @ChendurFilm @RIAZtheboss @RajaBhatta123 pic.twitter.com/axZ50PDkW3— M.Sasikumar (@SasikumarDir) September 17, 2022