புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள மோகன் நகரில் ஒரு வீட்டில், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக கோரிமேடு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அந்த வீட்டை தொடர்ந்து கண்காணித்த போலீஸார், அங்கு பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்தனர். அதையடுத்து கடந்த 13-ம் தேதி போலீஸார் அதிரடியாக அந்த வீட்டிற்குள் நுழைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு தனியறையில் 15 வயது சிறுமியுடன் இருந்த பச்சையப்பன் என்பவரையும், கடலூர் மாவட்டம், வடலூரைச் சேர்ந்த பால்ராஜ் (எ) பாலாஜி என்பவரையும் வளைத்துப் பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது பாலாஜியும், அவரின் மனைவி உமாவும் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து, பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்துவருவதை ஒப்புக்கொண்டனர். அதேபோல புதுச்சேரியைச் சேர்ந்த பச்சையப்பன் என்ற அந்த நபர் பாலியல் தேடலுக்காக வந்ததாக ஒப்புக்கொண்டதையடுத்து, பாலாஜி, அவர் மனைவி உமா, வாடிக்கையாளர் பச்சையப்பன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்தனர். பாலாஜி மற்றும் பச்சையப்பனை உடனே கைது செய்த போலீஸார், சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து புரோக்கராக செயல்பட்ட பாலாஜியின் செல்போனை கைப்பற்றி, அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது பாலாஜி கொடுத்த தகவலின் அடிப்படையில் வாடிக்கையாளர்களாக வந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 27 பேர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். மீதமுள்ள 25 பேரின் விபரங்களை சேகரித்துக்கொண்டு களத்தில் இறங்கிய தனிப்படை போலீஸார், நேற்று முன் தினம் 12 பேரை கைது செய்தனர். அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில், நேற்று நள்ளிரவு 8 பேர் கைது செய்யப்பட்டனர். இன்று அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அதன்பிறகு அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் மீதமுள்ள 5 பேர் தலைமறைவாக இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. மேலும் அவர்கள் முன் ஜாமீன் பெற முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ஆனால் போக்சோ வழக்கில் முன் ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அண்ணா நகரில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் போலீஸார் சோதனை செய்தபோது, அதில் 17 வயது சிறுமி ஒருவர் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார் என்பதை கண்டுபிடித்தனர். அந்த வழக்கில் 40 பேர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மற்றவர்கள் தேடப்பட்டு வரும் நிலையில்தான் தற்போது அதேபோன்று மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. மேலும் இந்த சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய கட்சிகளைச் சேர்ந்த சில அரசியல் புள்ளிகள் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.