அரக்கோணம்: அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சிக்னல்கள் செயலிழந்தன. இதனால் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.
சென்னை-அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் திருவாலங்காடு அருகே இன்று காலை 7மணியளவில் தண்டவாள இணைப்பு பகுதியில் கோளாறு (பாயிண்ட் பெயிலியர்) ஏற்பட்டது. இதன் காரணமாக அங்குள்ள சிக்னல்கள் செயலிழந்தன.
இதனால் சென்னையில் இருந்து கோவை செல்லும் அதிவிரைவு ரயிலான கோவை எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள் டக்கர் மற்றும் சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் 2 மின்சார ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாள பாயிண்ட்டில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் பல்வேறு மின்சார ரயில்கள் மறுமார்க்கத்தில் சற்று காலதாமதமாக சென்றது. இதற்கிடையே ரயில்வே ஊழியர்கள் சுமார் 1.30 மணிநேரம் போராடி 8.30மணியளவில் கோளாறை தற்காலிகமாக சரிசெய்தனர். இதையடுத்து ஆங்காங்கே நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்கள் ஒவ்வொன்றாக இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தண்டவாளத்தில் எதனால் கோளாறு ஏற்பட்டது என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.