கள்ளக்குறிச்சி: கடையின் மீது ஒட்டப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் போஸ்டரை கிழித்த கடைக்காரை பாஜகவினர் தாக்கியதால் அப்பகுதியில் மோதல் ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவினர் இன்று நாடு முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பல இடங்களில் மோடியின் பிறந்தநாளை ஒட்டி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பெத்தராயப்பாளையம் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியரின் குடியிருப்பு அருகே மின்சாதனங்களை விற்பனை செய்யும் கடையிலும் பாஜகவினர் பிரதமர் நரேந்திர மோடியின் போஸ்டரை ஒட்டினர்.
மோடி போஸ்டர்
இந்த நிலையில் அங்கு வந்த் கடையின் உரிமையாளர் தினேஷ் தன்னுடைய அனுமதி இல்லாமல் போஸ்டர் ஒட்டப்பட்டதால் அதனை கிழிக்க முயன்றிருக்கிறார். இதனை கண்ட பாஜக நிர்வாகி தினேஷிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
தாக்குதல்
அப்போது கடை உரிமையாளர் தினேஷை பாஜகவினர் கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் மோடியின் போஸ்டரை கிழித்த தினேஷின் கடை மீது மது பாட்டிலை வீசினார்.
ஒருவர் கைது
இதனை கண்ட அங்கிருந்த மக்கள் மதுபாட்டிலை வீசிய நபரை தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மோதல் வீரமடைந்ததை தொடர்ந்து அங்கு மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அங்கு வந்தார். தினேஷின் கடை மீது மதுபாட்டிலை வீசிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸ் குவிப்பு
இந்த மோதல் இரு தரப்பினர் இடையிலான மோதலாக மாறும் நிலை ஏற்பட்டதால் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் தலைமையில் சுமார் 70 க்கும் அதிகமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த தாக்குதலில் காயமடைந்த இருவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.