பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுநர், முதல்வர், தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்த நாளையொட்டி, அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் ஆர்.என்.ரவி: பிரதமர் மோடியின் பிறந்த நாளில், தேச சேவையில் நீண்ட ஆரோக்கியத்துடன் அவர் வாழ தமிழக மக்களின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: தொலைநோக்குப் பார்வை கொண்டவரும், துடிப்புமிக்கத் தலைவருமான பிரதமர் நரேந்திர மோடிக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். நமது தேசம், உலகை வழிநடத்துவதற்கான உங்களது திட்டம் விரைவில் ஈடேற வாழ்த்துகள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: பிரதமர் மோடியின் 72-வது பிறந்த நாளில் அவர் மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும். நாட்டுக்குச் சேவையாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: நல்லரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற மத்திய அரசை வல்லரசாக மாற்றக் கூடிய தங்களது கடின உழைப்புக்கும், நாட்டுப்பற்றுக்கும், தொடர்பணிக்கும் இந்நாளிலே நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் இறைவன் கொடுக்க வாழ்த்துகிறேன்.

பாமக தலைவர் அன்புமணி: பிரதமர் மோடியின் 72-வது பிறந்த நாளில் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மேலும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலம் பெற்று, மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். பொதுவாழ்வில் வெற்றி பெற்று, நாட்டுக்கும், மக்களுக்கும் சேவையாற்ற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

பாரிவேந்தர் எம்.பி.: நீண்டஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்து, இந்திய நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல இறைவன் அருள் எப்போதும் அவருக்குத் துணையிருக்கும்.

பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன்: பிரதமர் நரேந்திர மோடி நீண்டஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும், ஆயிரம் பிறை கண்டு, வாழ்வாங்கு வாழ்ந்து இந்திய தேசத்துக்குப் பெருமை சேர்க்க வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.