இந்தியாவில் செல்ல பிராணியாக வளர்க்கப்பட்ட சிவிங்கி புலிகள் அழிந்தது எப்படி?

புதுடெல்லி: அழிந்து போய் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிவிங்கி புலிகள் இந்தியாவில் கால் பதித்துள்ளன. நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 சிவிங்கி புலிகளில் மூன்றை மத்தியப் பிரதேச மாநிலம், சியோபூரில் உள்ள குனோ உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி நேற்று கூண்டிலிருந்து விடுவித்துள்ளார். அவை 750 சதுர கிமீ பரப்பளவிலான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பராமரிக்கப்பட உள்ளன. இந்நிலையில், இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் எப்படி அழிந்தன என்பது குறித்து இந்திய வன சேவை அதிகாரி பர்வீன் கஸ்வான் என்பவர் டிவிட்டரில் வரலாற்று தகவல்களை பகிர்ந்துள்ளார்.

சுமார் 85 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மூதாதையர்களுடன், ஒருகாலத்தில் ஆசியா மற்றும் ஆப்ரிக்கா வனப்பகுதிகளிலும் ஏராளமான சிவிங்கி புலிகள் வாழ்ந்துள்ளன. ஆனால், இன்று அவை ஆப்ரிக்காவில் 7,000 என்ற எண்ணிக்கையில் சுருங்கி விட்டன. இந்தியாவில் சிவிங்கி புலிகள் முற்றிலும் அழிந்த விலங்கினமாக கடந்த 1952ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டன.
இந்தியாவில் சிவிங்கி புலிகள் அழிவுக்கு முக்கிய காரணம் வேட்டையாடப்பட்டதுதான் என்கிறார் கஸ்வான். 1939ம் ஆண்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். அதில், அந்த காலத்தில் சிவிங்கி புலிகள் எப்படி வேட்டையாடப்பட்டன என்பது விவரிக்கப்பட்டுள்ளது. காட்டில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக இந்தியாவில் பலரும் சிவிங்கி புலிகளை வீட்டில் வளர்த்துள்ளனர். 1878ம் ஆண்டு வரையப்பட்ட ஒரு ஓவியத்தில், ஒவ்வொரு வீட்டின் முற்றத்திலும் செல்ல நாய்க் குட்டி போல, சிவிங்கி புலிகள் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்ததாக காட்டப்பட்டுள்ளது.

ஆனால் வேட்டைக்காக பழக்குவதிலும், காடுகள் அழிப்பாலும் சிவிங்கி புலி இனம் மெல்ல மெல்ல அழிந்துள்ளது. குறிப்பாக, மன்னர்களும், ஆங்கிலேயர்களும், முகாலய அரசர்களும் சிவிங்கி புலியை அதிகளவில் வேட்டையாடி உள்ளனர். 1947ம் ஆண்டு தற்போதைய சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள கொரியாவின் மன்னர் கடைசியாக 3 சிவிங்கி புலிகளை வேட்டையாடி புகைப்படம் எடுத்துள்ளார். சிவிங்கி புலிகள் அழிந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு தான் 1972ல் இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டமே கொண்டு வரப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் அழிந்து போன ஒரே விலங்கினம் சிவிங்கி புலிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

*100 கிமீ வேகம்
ஆனா, பாவம்
விலங்குகளிலேயே அதிவேகமாக ஓடக்கூடியது சிவிங்கிப் புலி. வெறும் 3 நொடியில் மணிக்கு 100 கிமீ வேகத்தை தாண்டி விடும். தற்போதுள்ள விலையுயர்ந்த கார்கள் கூட இவ்வளவு குறைவான நேரத்தில் இந்த வேகத்தை எட்ட முடியாது. ஆனால், சிவிங்கி புலியின் இந்த 100 கிமீ வேகம் என்பது வெறும் 30 நொடிகள் வரை மட்டுமே நீடிக்கும். அதற்குள் அது தனது இரையை வேட்டையாடி விடும். இல்லாவிட்டால், விட்டு விடும். இரையை பிடித்ததும், சற்று ஓய்வெடுத்த பிறகுதான் அதை சாப்பிடும். அதற்குள் மற்ற விலங்குகள் வந்து சிவிங்கி புலியை விரட்டிவிட்டு இரையை திருடிக் கொள்ளும். கழுகுகளுக்கு கூட சிவிங்கி புலிகள் பயப்படும். எனவே, இரையை மரத்தின் மீது கொண்டு சென்று சாப்பிடும் பழக்கம் கொண்டவை.

*எல்லாம் நாடகம்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘2010ம் ஆண்டில் நான் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த போது, சிவிங்கிப் புலி திட்டத்திற்காக தென் ஆப்ரிக்கா சென்று வந்தேன். இந்த விஷயத்தில் இப்போது பிரதமர் மோடி நடத்தும் நாடகம் தேவையற்றது. காங்கிரசின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தையும், தேசிய பிரச்னைகளையும் மூடி மறைக்கவும் அவர் செய்யும் தந்திரம் இது’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.