தமிழகத்தில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்?

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் காரணமாக, பள்ளிகள் மீண்டும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டன. மேலும், பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளும் நடைபெறவில்லை.

நடப்பு 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களும் பள்ளிகளுக்கு வருகைத் தந்து பாடங்களை படித்து வருகின்றனர்.

இதற்கிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த சில நாட்களாக, குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது குறித்து விளக்கம் அளித்த சுகாதாரத் துறை அதிகாரிகள், இந்த வைரஸ் காய்ச்சல் மழைக் காலத்தில் பரவக் கூடியது தான் என்றும், இதைக் கண்டு யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்து உள்ளது. இதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுச்சேரியில், வரும் 25 ஆம் தேதி வரை 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலும் வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ள நிலையில், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர்கள், “பள்ளி மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அளிக்க வேண்டும். வைரஸ் காய்ச்சல் தாக்கம் குறைந்த பிறகு மீண்டும் பள்ளிகளை திறக்கலாம். 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்து விட்டு, மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தலாம். விரைவில் பருவ மழைக் காலம் தொடங்க உள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்” என தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.