ஆத்தூர் அருகே பயணிகளை ஏற்றுவதற்காக சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்தில், லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தந்தை, மகன் உள்பட ஐந்து பேர் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு. இவரது மகள் தீபா என்பவர் சென்னையில் வசித்து வருகிறார். இவரது 14 வயது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு, ஆறு பேர் சென்னைக்கு செல்வதற்காக சீர்வரிசை பொருட்களுடன் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகில் சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தில் செல்வதற்கு நின்று கொண்டிருந்தனர்.
அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்தின் பின்பகுதியில், கிளீனர் உதவியுடன் லக்கேஜ் பெட்டியில் சீர்வரிசை பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது சேந்தமங்கலத்தில் இருந்து சேலம் வழியாக ஆத்தூர் நோக்கி எம்சாண்ட் மணல் ஏற்றி வந்த டாரஸ் லாரி பின்னால் இருந்த அந்த ஏழு பேர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பெத்தநாயக்கன்பாளையம் சிவன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (63), அவரது மகன் ரவிக்குமார் (41), அவர்களின் உறவினரான தலைவாசல் அருகே ஆறகளூரை சேர்ந்த செந்தில்வேலன் (46), சுப்ரமணி (40) மற்றும் ஆம்னி பேருந்தின் கிளீனர் சேலம் தீபன் (25) உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் திருநாவுக்கரசின் மனைவி விஜயா (60), அவரது உறவினரான ஜெயபிரகாஷ் (41) ஆகிய இருவர் படுகாயம் அடைந்த நிலையில், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள இவர்கள் மேல் சிகிச்சைக்கு சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தகவலறிந்த ஆத்தூர் ஆர்.டி.ஓ., சரண்யா, வாழப்பாடி டி.எஸ்.பி., சுவேதா ஆகியோர், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி லாரியை நிறுத்திவிட்டு தலைமறைவான லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM