புதுடெல்லி: புகழ்பெற்ற சார் தாம் கோயில்களில் ஒன்றாக கேதார்நாத் உள்ளது. இங்குள்ள கருவறையில் தற்போது 230 கிலோ எடையில் வெள்ளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு தங்கத் தகடுகள் பொருத்திக் கொடுக்க மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் முன்வந்துள்ளார். இது குறித்து பத்ரிநாத் – கேதார்நாத் கோயில் கமிட்டி அதிகாரிகள் கூறியதாவது:
கேதார்நாத் கோயிலின் கருவறையில் கடந்த 2017-ம் ஆண்டு வெள்ளி தகடுகள் பொருத்தப்பட்டன. இங்கு தங்க தகடுகள் பொருத்தி தர மும்பை வைர வியாபாரி ஒருவர் முன்வந்துள்ளார். அவர் தனது பெயரை பொதுவில் தெரிவிக்க விரும்பவில்லை. கேதார்நாத் கோயில் கருவறையில் தங்க தகடுகள் பொருத்த அவர் அரசிடம் அனுமதி கோரினார். இதற்கு கடந்த மாதம் ஒப்புதல் கிடைத்தது. தங்க தகடுகள் தயாரிக்க எவ்வளவு தங்கம் தேவை எனத் தெரியவில்லை. வெள்ளித் தகடுகள் செய்ய 230 கிலோ வெள்ளி தேவைப்பட்டது. தங்க தகடுகளுக்கு கீழே தாமிர தகடுகள் இருந்தாலும், அதில் பாதி அளவுக்கு தங்கம் இடம்பெறும் என எதிர்பார்க்கிறோம்.
தங்க தகடுகள் பொருத்துவதற்காக, வெள்ளித் தகடுகளை அகற்றும் பணியை தொடங்கிவிட்டோம். அதன்பின் கருவறைக்குள்ளும், தூண்களிலும் தாமிர தகடுகள் பொருத்தப்படும். அளவெடுக்கும் பணி முடிவடைந்ததும், தங்க தகடுகள் செய்யப்பட்டு பொருத்தப்படும். கருவறையின் சுவர்கள், மேற்கூரைகள் மற்றும் தூண்களில் தங்க தகடுகள் பொருத்தப்படவுள்ளன. இவ்வாறு கோயில் கமிட்டி அதிகாரிகள் கூறினர்.