‘மாநாடு’ படத்தை தொடர்ந்து சிம்புவின் நடிப்பில் மாஸாக திரையரங்குகளில் வெளியாகி வசூலை வாரி குவித்து கொண்டிருக்கிறது ‘வெந்து தணிந்தது காடு‘ படம். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் செப்டம்பர்-15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பட வெளியீட்டிற்கு முன்னர் இயக்குனர் கவுதம் மேனன் ரசிகர்களை நன்கு தூங்கிவிட்டு வந்து படத்தை பார்க்க சொன்னது பேசுபொருளாக மாறி படம் குறித்த பல்வேறு விதமான கருத்துக்கள் கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்படம் வெளியானதிலிருந்து அதிகளவில் நேர்மறையான விமர்சனங்கள் தான் ரசிகர்களிடம் இருந்து கிடைத்து வருகிறது. படத்திற்கு ஜெயமோகன் திரைக்கதை எழுத, ஐசரி கே கணேஷ் படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில் சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ், அப்புக்குட்டி, டெல்லி கணேஷ் போன்ற பலர் நடித்துள்ளனர்.
ஒரு சாதாரண இளைஞன் மும்பையில் சிக்கிக்கொண்டு எப்படி ஒரு கேக்ங்ஸ்டராக மாறுகிறார் என்பதே இப்படத்தின் மையக்கரு. ரசிகர்கள் பலரும் இப்படத்தின் வசூல் எவ்வளவு என்பதை அறிய ஆவலாக காத்திருக்கும் சமயத்தில் படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் ரூ.10.86 கோடி வசூல் செய்திருக்கிறது. அதனைத்தொடர்ந்து இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமையன்று காலை நேர வசூலை தவிர்த்து அன்றைய தினம் மொத்தம் ரூ.8 கோடி வசூல் செய்திருக்கிறது. மேலும் வார இறுதி நாட்களையொட்டி படம் வெளியானதால் இந்த வார இறுதியில் படம் எப்படியும் ரூ.50 கோடி அளவில் வசூல் செய்யும் என்று கணிக்கப்படுகிறது.
தமிழில் வெற்றிநடைபோட்டு கொண்டிருக்கும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் தெலுங்கு வெர்ஷன் சில காரணங்களால் செப்டெம்பர்-15ம் தேதி வெளியிடப்பட முடியாமல் போன நிலையில் படம் இரண்டு நாட்கள் தாமதமாக செப்டம்பர்-17ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழில் படம் வசூலை அள்ளியதை போன்றே தெலுங்கு பதிப்பிலும் படம் வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.