பி.எஸ்.எடியூரப்பாவுக்கு புதிய சிக்கல் – அதிரடி காட்டும் லோக் ஆயுக்தா!

ஊழல் வழக்கு தொடர்பாக, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா, அவரது மகன், மருமகன்கள், பேரன் உட்பட ஒன்பது பேர் மீது, கர்நாடக லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில், 2008 – 10 ஆம் ஆண்டில், பி.எஸ்.எடியூரப்பா முதலமைச்சராக இருந்த போது, அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு ஒப்பந்தங்களை வழங்குவதிலும், பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் சார்பில் வீட்டுமனைகள் வழங்கியதிலும் முறைகேடுகள் நடந்தன.

இதில் எடியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும், ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம், 12 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைப் பற்றி விசாரணை நடத்தும்படி, பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆப்ரஹாம், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், ‘எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்கு குறித்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். ‘வரும் நவம்பர் மாதம் 2 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்’ என, லோக் ஆயுக்தா போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, மக்கள் பிரதிநிதிதிகள் சிறப்பு நீதிமன்றம், கடந்த 14 ஆம் தேதி உத்தரவிட்டது.

இதை அடுத்து, எடியூரப்பா, அவரது இளைய மகன் விஜயேந்திரா, பேரன் சசிதர் மரடி, மருமகன்கள் சஞ்சய் ஸ்ரீ, விருபாக் ஷப்பா யமகனமரடி, கூட்டுறவு துறை அமைச்சர் சோமசேகர், ஒப்பந்ததாரர் சந்திரகாந்த் ராமலிங்கம், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பிரகாஷ், ரவி ஆகிய ஒன்பது பேர் மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் எடியூரப்பா குடும்பத்தினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அவர், லோக் ஆயுக்தா வழக்கில் முதலமைச்சர் பதவியை இழந்து, சிறைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.