டேராடூன்: புகழ் பெற்ற கேதார்நாத் கோயிலின் கருவறை சுவரில் தங்கத் தகடு பதிப்பதற்கு அர்ச்சகர்களில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உத்தரகாண்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயிலின் கருவறை சுவரில் வெள்ளி தகடுகள் பதிக்கப்பட்டு இருந்தது. இதை மாற்றுவதற்கு மகாராஷ்டிராவை சேர்ந்த சிவபக்தர் ஒருவர் தங்கத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார். இதையடுத்து, கோயிலின் கருவறையில் இருந்த வெள்ளி தகடுகளை அகற்றி விட்டு, தங்கத் தகடு பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு, இக்கோயில் அர்ச்சகர்களின் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தங்கத் தகடு பதிப்பதின் மூலம், கோயிலின் பாரம்பரியம் பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ‘சுவர்களில் இயந்திரங்களை பயன்படுத்தி துளையிடுவதால், கோயில் சுவர் வலுவிழந்து விடும். இதனை ஏற்க முடியாது,’ என்றும் அவர்கள் கூறியுள்ளனர். கேதார்நாத் கோயில் கமிட்டி தலைவர் அஜேந்திரா அஜய் கூறுகையில், ‘‘ கோயிலை புதுப்பிப்பதும், அழகுபடுத்துவதும் சாதாரண நடைமுறையாகும்,” என்றார்.