கள்ளக்குறிச்சி மோடி போஸ்டர் கிழிப்பு! போலீசாரை நோக்கி பீர் பாட்டிலை வீசி பாஜகவினர் ரகளை! இருவர் கைது

கள்ளக்குறிச்சி: கடையில் அனுமதியின்றி ஒட்டப்பட்ட போஸ்டர் விவகாரத்தில் போலீசாரை பாஜகவினர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதேபோல தமிழ்நாட்டிலும் பாஜகவும் பல நிகழ்ச்சிகளை நடத்தியது. மோடியின் பிறந்த நாளுக்காகப் பல இடங்களில் அவரை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

போஸ்டர்

இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாவட்டம் வஉசி நகர் 7ஆவது தெரு பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 16 இரவு பாஜகவினர் சார்பில் அங்குள்ள கடைகளில் போஸ்டர் ஒட்டியதாகத் தெரிகிறது. இருப்பினும், தனது கடையின் முன்பு போஸ்டர் எதுவும் ஒட்ட வேண்டாம் என்று கடையின் உரிமையாளர் தினேஷ் பாஜகவினரிடம் கூறியதாகத் தெரிகிறது.

கிழிப்பு

கிழிப்பு

இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் பாஜக நிர்வாகிகள் இரவு நேரத்தில் சென்று அங்கு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இதன் காரணமாகச் செப்டம்பர் 17இல் அந்த கடையின் உரிமையாளர் தினேஷ், தனது கடையில் அனுமதி இல்லாமல் ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்துள்ளார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த பாஜக நிர்வாகிகள், போஸ்டரை கிழித்த தினேஷை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

விசாரணை

விசாரணை

இதன் காரணமாக இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் மற்றும் கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் இருதரப்பினரிடையே சமாதானம் ஏற்படுத்தப் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். போலீசார் பேச்சுவார்த்தை நடந்தும் போதே பாஜக நகரத் தலைவர் சத்யா மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மனித வள மேம்பாட்டு பிரிவு மாவட்டச் செயலாளர் செல்லப்பன் ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.

 பீர் பாட்டில்

பீர் பாட்டில்

அவர்கள் போலீசார் விசாரணை நடத்தி வந்த இடத்தில் காலி பீர் பாட்டிலை வீசி ரகளையில் ஈடுபட்டு உள்ளனர். அந்த காலி பீர் பாட்டிகள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மீது பட்டதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விசாரணை நடத்தி வந்த போலீசாரையே பாஜகவினர் தாக்கிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ட

கைது

கைது

இதையடுத்து போலீசாரை நோக்கி பீர் பாட்டிலை வீசிய கள்ளக்குறிச்சி பாஜக நகரத் தலைவர் சத்யா உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் அப்பகுதியில் நேரில் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து அங்கு மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.