கரூர் மாவட்டத்தில் மூலப்பொருள் விலை உயர்வால் பின் தங்கும் கொசு வலை தொழில்: உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் கலக்கம்

கரூர்: ஜிஎஸ்டி, மூலப்பொருட்களின் விலை உயர்வால் கரூர் மாவட்டத்தில் கொசு விலை தொழில் பின்தங்குகிறது. இதனால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். கரூரில் டெக்ஸ்டைல், கொசு வலை மற்றும் பஸ் பாடி ஆகிய மூன்று தொழில்களிலும் கரூர் மாவட்டம் முதன்மையாக விளங்கியது. கரூரில் கொசுவலை நூல் மட்டும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் 100 உள்ளன. அதே போல் நூல் உற்பத்தி செய்து கொசு வலையும் தயாரிக்கும் நிறுவனங்கள் சுமார் 400 முதல் 500 வரை இருந்து வருகின்றன.

ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை முதலீட்டில் வீடுகளில் 2 முதல் 5 கொசுவலை தயாரிக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி கொசுவலை தயாரித்து அதனை பெரிய பெரிய கம்பெனிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.மேலும் கொசுவலை உற்பத்தி தொழிலில் மேற்கு வங்காளம், ஒரிசா மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என நேரடியாக மற்றும் மறைமுகமாக சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். பெண்களுக்கு தினசரி கூலியாக ரூ. 300, ஆண்களுக்கு ரூ.750 வரை கிடைக்கும். கரூரில் தயாராகும் கொசுவலை தரமானது. தினமும் ரூ.5 கோடி மதிப்பிலான கொசு வலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய அரசு கலால் வரி விதித்தது. அப்போதைய கரூர் எம்பி பரிந்துரையின் பேரில் கலால் வரி நீக்கப்பட்டது.

தற்போது ஒன்றிய அரசு அமல்படுத்திய ஜிஎஸ்டி வரி விதிப்பில் துணிகளுக்கு 5% வரியும், கொசுவலை உரிமையாளர்கள் பயன்படுத்தும் மூலப்பொருளுக்கு 18%வரியும் நடைமுறையில் உள்ளது. கொசுவலை தயார் செய்யும் மூலப்பொருளான (ஹெட்ச் டி பி இ) ரிலையன்ஸ், ஹால்தியா கம்பெனிகள் மட்டும் மோனா போலியாக சப்ளை செய்கிறது. கொசுவலை உற்பத்தியாளர்கள் அவர்களிடம் தான் மூலப் பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தற்போது ஒரு கிலோ மூலப்பொருள் (hdpe) ரூ.136 வரை விலையில் உள்ளது. மேலும் தற்போது உற்பத்தி செய்யும் தரமான கொசு வகைகளின் விற்பனை குறைந்து விட்டது.

காரணம், பங்களாதேஷ், சைனா, தைவான் நாட்டு கொசு வலைகள் எந்தவித இறக்குமதி வரி இல்லாமலும் நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மேற்கூறிய 3 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும். கொசுவலை களுக்கு 20% சதவீதம் இறக்குமதி வரி விதித்தது. இதனால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி குறைந்து நம் உள்நாட்டு உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்தது.

தற்போது ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்து, இறக்குமதி வரிக்கு பதிலாக ஜிஎஸ்டி வரியின் கீழ், மத்திய அரசு அனுமதித்ததால் கொசுவலை விற்பனை துணி வீழ்ச்சியடைந்தது. இது ஒருபுறம் இருக்க, கரூரில் தயாராகும் மருந்து கலந்த துணி உற்பத்தி நிறுவனங்களுக்கு துணி தயாரித்து தரவேண்டிய ஜாப் ஒர்க் (jobwork) நிலை ஏற்பட்டுள்ளது.

கரூரில் தற்போது கொசுவலை நூல் உற்பத்தி செய்யும் 100 நிறுவனங்களில், தற்போது 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் தமிழக அரசு கொசுவலையை வாங்கி உள்ளூர் உற்பத்தியாளர்களை பாதுகாக்க வேண்டும்.
மேலும், ஒன்றிய அரசு தனிக்கவனம் செலுத்தி கொசுவலை தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் மற்றும் அதைச் சார்ந்த உரிமையாளர்களை பாதுகாக்க வேண்டும் என்று கரூர் மாவட்ட பாரம்பரிய கொசுவலை சங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.