புதுடெல்லி: பீகார் துணை முதல்வர் தேஜஸ்வியின் ஜாமீனை ரத்து செய்யும்படி, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 2006ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐமு கூட்டணி ஆட்சியில் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, ராஞ்சி மற்றும் பூரியில் இந்திய ரயில்வே உணவு வழங்குதல் மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐஆர்சிடிசி) கீழ் செயல்பட்டு வந்த 2 ஓட்டல்களை பராமரிக்கும் ஒப்பந்தத்தை 2 தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டது. இதற்கு லஞ்சமாக, பாட்னாவில் வணிக முக்கியத்துவம் வாய்ந்த 3 ஏக்கர் நிலம், லாலு குடும்பத்துக்கு கைமாற்றப்பட்டதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில், லாலுவின் மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், லாலுவின் மனைவி ரப்ரிதேவி உட்பட 12 பேர், குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு 2018ல் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஜாமீன் நிபந்தனைகளை மீறி தேஜஸ்வி செயல்ப்பட்டு வருவதால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யும்படி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று மனு தாக்கல் செய்துள்ளது.